புகழூர் நகராட்சியின் தலைவராக குணசேகரன் தேர்வு


புகழூர் நகராட்சியின் தலைவராக குணசேகரன் தேர்வு
x
தினத்தந்தி 5 March 2022 1:11 AM IST (Updated: 5 March 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

புகழூர் நகராட்சியின் தலைவராக குணசேகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

நொய்யல், 
புகழூர் நகராட்சி
கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சியானது 1935-ம் ஆண்டு முதல் புன்செய்புகழூர் பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. பின்னர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 7-12-2021-ந் தேதி புன்செய் புகழூர் பேரூராட்சியுடன் தமிழ்நாடு காகித ஆலை புகழூர் பேரூராட்சி இணைக்கப்பட்டு புகழூர் 2-ம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் புகழூர் நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. 20 வார்டுகளையும், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, அ.தி.மு.க., பா.ஜனதா ஆகியவை தலா ஒரு வார்டை கைப்பற்றின. இதனால் தி.மு.க. கூட்டணி மொத்தம் 22 வார்டுகளை கைப்பற்றியது. 
போட்டியின்றி தேர்வு
இதனைதொடர்ந்து வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் கடந்த 2-ந் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். இந்தநிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் நகராட்சியின் முதல் தலைவருக்கான தேர்தல் நகராட்சி அலுவலகத்தின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் தி.மு.க.வை சேர்ந்த 2-வது வார்டு கவுன்சிலர் குணசேகரன் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 16-வது வார்டு கவுன்சிலர் செல்வக்குமரன் முன்மொழிந்தார். 5-வது வார்டு கவுன்சிலர் பூவிழி வழிமொழிந்தார்.
இவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் புகழூர் நகராட்சியின் முதல் தலைவராக குணசேகரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக நகராட்சி கமிஷனர் கனிராஜ் அறிவித்தார். இதில் அ.தி.மு.க. கவுன்சிலர் ஹேமலதா தவிர மற்ற கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
வாழ்த்து
இதையடுத்து, மதியம் 2.30 மணியளவில் புகழூர் நகராட்சியின் துணைத்தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 19-வது வார்டு கவுன்சிலர் பிரதாபன் துணைத்தலைவருக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 13-வது வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வி முன்மொழிந்தார். 12-வது வார்டு கவுன்சிலர் நந்தா வழிமொழிந்தார். இவரை எதிரித்து யாரும் மனு தாக்கல் செய்யாததால் பிரதாபன் போட்டியின்றி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக நகராட்சி கமிஷனர் கனிராஜ் அறிவித்தார். அதனைதொடர்ந்து துணைத் தலைவருக்கு தேர்வுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து, தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குணசேகரனுக்கும், துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதாபனுக்கு அனைத்து வார்டு கவுன்சிலர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story