காவேரிப்பாக்கம் பேரூராட்சி தலைவராக லதாநரசிம்மன் தேர்வு


காவேரிப்பாக்கம் பேரூராட்சி தலைவராக லதாநரசிம்மன் தேர்வு
x
தினத்தந்தி 5 March 2022 1:15 AM IST (Updated: 5 March 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

காவேரிப்பாக்கம் பேரூராட்சி தலைவராக லதாநரசிம்மன் தேர்வு செய்யப்பட்டார்.

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க.8 வார்டிலும், அ.தி.மு.க. 4 வார்டிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றிபெற்றன. சுயேச்சையாக 2 பேர் வெற்றிபெற்றனர்.

இந்த நிலையில் காவேரிப்பாக்கம் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று காலை தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.

அப்போது தி.மு.க. சார்பில் 7-வது வார்டு உறுப்பினர் லதாநரசிம்மன் மற்றும் 13-வது வார்டு உறுப்பினர் தீபாமுருகன் என இரண்டு வேட்பாளர்கள் வேட்புமனு வாங்கி பூர்த்தி செய்தனர். 

இதில் 7-வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் 13-வது வார்டு வேட்பாளர் மனு முழுமையாக பூர்த்தி அடையவில்லை. இதனால் நிராகரிக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

இதனால் போட்டி வேட்பாளர் மற்றும் அ.தி.மு.க.வினர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. 

இதனையடுத்து ஒருமணி நேரத்திற்கு பிறகு தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன் 7-வது வார்டு உறுப்பினர் லதா நரசிம்மன் ஒருமனதாக பேரூராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.

அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடந்தது.

இதில் வார்டு உறுப்பினர்கள் ஒரு சிலர் மட்டுமே வாக்கு அளிக்க வந்ததால் போதுமான பெரும்பான்மை இல்லாததால் துணை தலைவர் தேர்தல் மறு தேதி வரும் வரை ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரன் தெரிவித்தார்.

Next Story