சோளிங்கர் நகராட்சி தலைவராக தமிழ்ச்செல்வி பதவியேற்பு


சோளிங்கர் நகராட்சி தலைவராக  தமிழ்ச்செல்வி பதவியேற்பு
x
தினத்தந்தி 5 March 2022 1:25 AM IST (Updated: 5 March 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த தமிழ்ச்செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டார்.

சோளிங்கர்

சோளிங்கர் நகராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த தமிழ்ச்செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டார்.

தலைவர் தேர்தல்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதன்முைறயாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. 

இதில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் தி.மு.க. 15 வார்டிலும், அ.ம.மு.க மற்றும் காங்கிரஸ் தலா 4 வார்டிலும், பா.ம.க. 2 வார்டிலும், அ.தி.மு.க.ஒரு வார்டிலும் வெற்றி பெற்றன. சுயேச்சை ஒருவர் வெற்றி பெற்றிருந்தார்.

கடந்த 2-ந் தேதி இவர்கள் நகராட்சி வார்டு கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து நகராட்சி தலைவருக்கான தேர்தல்  ஆணையர் பரந்தாமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. 

இதில் 13-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் அ.தமிழ்ச்செல்வி நகராட்சி தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து சோளிங்கரின் முதல் நகராட்சி தலைவராக தமிழ்ச்செல்வி பதவியேற்றுக்கொண்டார்.

அதேபோல் துணைத் தலைவராக 1-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பழனி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து நகராட்சியின் முதல் தலைவராக பதவியேற்றுக் கொண்ட தமிழ்செல்விக்கும் நகராட்சி துணைத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட பழனிக்கும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் சால்வை, மலர் மாலைகள் அணிவித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

அமைச்சர் தலைமையில் ஊர்வலம்

மாலையில் கைத்தறி துறை அமைச்சர் காந்தி தலைமையில் சோளிங்கர் காந்தி சிலை அருகில் இருந்து வெற்றிபெற்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், கவுன்சிலர்கள் கட்சியினருடன் ஊர்வலமாக புறப்பட்டனர். 

ஊர்வலம் அண்ணா சிலையை அடைந்ததும் அண்ணா சிலைக்கும், பஸ் நிலையம் அருகில் இருந்த காமராஜர் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

ஊர்வலத்தில், வெற்றி பெற்ற உறுப்பினர்களான தி.மு.க.வைச் சார்ந்த அருண் ஆதி, சிவானந்தம், அன்பரசு மற்றும் புதிய நகராட்சி உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோபால், தி.மு.க.ஒன்றிய குழு உறுப்பினர் பிச்சாண்டி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, செல்வம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் முகமது அலி மற்றும் இளைஞரணி கரிம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story