சோழ மன்னர்கள் அரண்மனையின் சுற்றுச்சுவர்கள்-தங்க காப்பு கண்டுபிடிப்பு


சோழ மன்னர்கள் அரண்மனையின் சுற்றுச்சுவர்கள்-தங்க காப்பு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 5 March 2022 2:20 AM IST (Updated: 5 March 2022 2:20 AM IST)
t-max-icont-min-icon

அகழாய்வு பணியில் சோழ மன்னர்கள் அரண்மனையின் சுற்றுச்சுவர்கள்-தங்க காப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

மீன்சுருட்டி:

அகழாய்வு பணி
தமிழக தொல்லியல் துறை மூலம் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில் உள்ள, சோழப்பேரரசரான முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் ஆண்ட சோழ மன்னர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகைமேடு பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்றன.
இந்த பணியின்போது கூரை ஓடுகள், பானை ஓடுகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினாலான ஓடுகள், இரும்பினாலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள், பானை விளிம்புகள், சிறிய அளவிலான அரிய பொருட்கள், கட்டிடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்தன. மேலும் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவரும், பின்னர் அரண்மனையின் தொடர்ச்சியாக 2-வது பாகமும் கண்டறியப்பட்டது. வடிகால் அமைப்பு போன்ற சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முதற்கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்தது.
தங்க காப்பு
இந்நிலையில் இப்பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தற்போது 10-க்கு 10 என்ற சதுர அடி அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதில் அரண்மனையின் சுற்றுச்சுவர்கள், இரும்பினாலான ஆணிகள், மண்பாண்ட விளிம்புகள் போன்றவை கிடைத்துள்ளன. கையில் அணியும் காப்பு போன்ற தங்கத்தினாலான காப்பு ஒன்று தற்போது கிடைத்துள்ளது. இந்த காப்பு சுமார் 7.920 கிராம் எடை கொண்டதாக உள்ளது. இதன் நீளம் 4.9 மி.மீட்டரும், அதன் நடுவில் அமைந்துள்ள தடிமனான பகுதியின் அளவு 4 மி.மீட்டர் என்ற அளவிலும் உள்ளது.
எலும்பு துண்டுகள்
மேலும் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியில் நேற்று சிறு சிறு எலும்பு துண்டுகள் கிடைத்துள்ளன. தொல்லியல் துறையின் ஆய்வுக்கு பின்னரே இது மனிதர்களின் உடல் எலும்புகளா? என்பது தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். தற்போது 12 பணியாளர்கள் மட்டுமே அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

Next Story