முதல் மேயராக காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் தர்வு


முதல் மேயராக காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் தர்வு
x
தினத்தந்தி 5 March 2022 2:34 AM IST (Updated: 5 March 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் மாநகராட்சி முதல் மேயராக காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் ேதர்வு செய்யப்பட்டார். ஆட்டோ ஓட்டியபடி வந்து அவர் தேர்தலில் பங்கேற்றார்

கும்பகோணம்;
கும்பகோணம் மாநகராட்சி முதல் மேயராக காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் தர்வு செய்யப்பட்டார். ஆட்டோ ஓட்டியபடி வந்து அவர் தேர்தலில் பங்கேற்றார்
கும்பகோணம் மாநகராட்சி
கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதல் தேர்தல் கடந்த 19-ந் தேதி நடந்தது. கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் தி.மு.க. 37 வார்டுகளிலும், காங்கிரஸ்-2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகியவை தலா ஒரு வார்டிலும், அ.தி.மு.க. 3 வார்டுகளிலும் சுயேச்சைகள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். 
இந்த நிலையில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவி தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. 
ஆட்டோ ஓட்டியபடி வந்தார்
கும்பகோணம் மாநகராட்சி மேயர் தேர்தல் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. கும்பகோணம் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன், மேயர் தேர்தலில் கலந்து கொள்ள கும்பகோணம் நகர காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆட்டோ ஓட்டியபடி கும்பகோணம் மாநகராட்சி அலுவலக கட்டிடத்துக்கு வந்தார். 
மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், முறைப்படி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார். 
மேயராக சரவணன் தேர்வு
கும்பகோணம் மாநகராட்சி 17-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் சரவணன் மட்டும் மேயர் தேர்தலில் நிற்பதாக அறிவித்தார். சரவணன் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்ததால் அவர் கும்பகோணம் மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு மேயர் பதவிக்கான அங்கி அணிவிக்கப் பட்டு செங்கோல் வழங்கப்பட்டது.
மேயராக தேர்வு செய்யப்பட்ட சரவணன் கூறும்போது, கும்பகோணம் நகர மக்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் மேலும் மேம்படுத்தப்படும் என்றார். 
மொத்தம் உள்ள 48 உறுப்பினர்களில், தி.மு.க. கூட்டணியை சேர்ந்த 45 உறுப்பினர்கள் மட்டும் தேர்தலில் கலந்து கொண்டனர். அ.தி.மு.கவை சேர்ந்த 3 பேர் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை.
துணை மேயர் தேர்வு
இதைத்தொடர்ந்து மதியம் நடந்த துணை மேயருக்கான தேர்தலில் கும்பகோணம் மாநகராட்சி 26-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் சு.ப.தமிழழகன் போட்டியின்றி துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேயர் சரவணன் மற்றும் துணை மேயர் சு.ப.தமிழழகன் ஆகியோருக்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம்,  அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story