கலப்பு திருமணம் செய்த வாலிபர் கொலை
கலபுரகி அருகே கலப்பு திருமணம் செய்த வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
பெங்களூரு:
கலபுரகி மாவட்டம் ஸ்டேஷன் பஜார் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ப்ரீத்தம் பன்னகட்டி (வயது 29). இவர், சமீபத்தில் தான் ஒரு இளம்பெண்ணை கலப்பு திருமணம் செய்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ப்ரீத்தம் மற்றும் இளம்பெண் குடும்பத்தினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றிருந்த ப்ரீத்தம், வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ப்ரீத்தமை வழிமறித்து மர்மநபர்கள் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த ப்ரீத்தம் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி ஸ்டேஷன் பஜார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் நேரில் சென்று ப்ரீத்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரித்ததில், ப்ரீத்தம் கவுடா வேறு சமுதாயத்தை சேர்ந்தவர். இருப்பினும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் பெண்ணின் குடும்பத்தினர் ப்ரீத்தமை கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து ஸ்டேஷன் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மா்மநபர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story