பெங்களூரு கே.பி.அக்ரஹாராவில் உள்ள சீயோன் ஆலயத்தில் 32-வது ஆண்டு பிரதிஷ்டை, அசன பண்டிகை கோலாகலம்


பெங்களூரு கே.பி.அக்ரஹாராவில் உள்ள சீயோன் ஆலயத்தில் 32-வது ஆண்டு பிரதிஷ்டை, அசன பண்டிகை கோலாகலம்
x
தினத்தந்தி 5 March 2022 3:10 AM IST (Updated: 5 March 2022 3:10 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு கே.பி.அக்ரஹாரா பகுதியில் உள்ள சீயோன் ஆலயத்தில் 32-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பெங்களூரு:

அசன பண்டிகை

  பெங்களூரு கே.பி.அக்ரஹாரா நேதாஜி நகர் பகுதியில் சீயோன் ஆலயம் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை, அசன பண்டிகை மார்ச் 4-ந் தேதி (அதாவது நேற்று) கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

  அதன்படி நேற்று சீயோன் ஆலயத்தில் 32-வது ஆண்டு பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை ஆலய ஆயர் செல்வி தாசன் அதிகாலை 5.30 மணிக்கு ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவில் ஏரியா சேர்மன் அருட்திரு ஜஸ்டின் யேசுதாஸ், சிட்டி ஏரியா சேர்மன் அருட்திரு பால் தினகரன், ஆயர் வில்சன் தாசன் ஆகியோர் கலந்து கொண்டு தேவ செய்தியை வழங்கினர்.

இன்னொரு ஆலயம்

  சிவில் ஏரியா சேர்மன் அருட்திரு ஜஸ்டின் யேசுதாஸ் பேசுகையில், கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு சீயோன் ஆலயம் சிறிய ஆலயமாக இருந்தது. தற்போது இந்த ஆலயம் பிரமாண்ட வளர்ச்சி அடைந்து உள்ளது. இதற்கு ஆலயத்தின் ஆயர், பரிபாலன குழு மற்றும் சபை மக்களே காரணம். இந்த பண்டிகையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு இருக்கிறீர்கள். 

மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது இந்த ஆலயத்தில் அமர கூட இடம் இல்லை. இன்னொரு ஆலயம் கூட கட்டலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. மக்களாகிய நம்மை தேவன் பாதுகாத்து வருகிறார். தேவன் நம்மை எப்போதும் சீர்படுத்தி, சிறப்பு படுத்தி நிலை நாட்டுவார் என்றார்.

சிறப்பு ஆராதனை

  பின்னர் அவர் 32-வது ஆண்டு பிரதிஷ்டை, அசன பண்டிகை கொண்டாடும் சீயோன் ஆலய ஆயர் செல்வி தாசன் மற்றும் திருச்சபையினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதன்பின்னர் சீயோன் ஆலயத்தின் ஆயர் செல்வி தாசன் மக்களுக்கு தேவ செய்தியை வழங்கினார். இதனை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் சிறப்பு ஆராதனை நடந்தது.

  பின்னர் மதியம் 1 மணியளவில் அசன விருந்தை ஆயர் செல்வி தாசன் தொடங்கி வைத்தார். இந்த விருந்தில் நேதாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். அசன பண்டிகையையொட்டி ஆலயத்தில் இன்னிசையுடன் கூடிய ஆராதனை பாடல்கள் ஒலிக்கப்பட்டன. மேலும் விழாவையொட்டி ஆலயம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

கலந்து கொண்டவர்கள்

  இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய ஆயர் செல்வி தாசன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் பீட்டர் தங்கதுரை, கமிட்டி உறுப்பினர்கள், ஆலய ஆண்கள் ஐக்கியம், பெண்கள் ஐக்கியம், வாலிபர்கள் ஐக்கியம், ஓய்வுநாள் பாடசாலை குழு, சீயோன் ஆலய குடும்பத்தினர் செய்து இருந்தனர். 

இந்த பண்டிகையில் பல்வேறு ஆலயங்களை சேர்ந்த ஆயர்களும், காந்திநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தினேஷ் குண்டுராவ், முன்னாள் கவுன்சிலர்கள் பி.டி.எஸ்.நாகராஜ், பழனி, கர்நாடக இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் செல்லப்பா மற்றும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அசன விருந்தை தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் யோவான் குழுவினர் செய்து இருந்தனர்.

Next Story