ஈரோடு மாநகராட்சியின் 2-வது பெண் மேயர் நாகரத்தினம்


ஈரோடு மாநகராட்சியின் 2-வது பெண் மேயர் நாகரத்தினம்
x
தினத்தந்தி 5 March 2022 3:27 AM IST (Updated: 5 March 2022 3:27 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகராட்சியின் 2-வது பெண் மேயர் என்ற பெருமையை எஸ்.நாகரத்தினம் பெற்றார்.

ஈரோடு 
ஈரோடு மாநகராட்சியின் 2-வது பெண் மேயர் என்ற  பெருமையை எஸ்.நாகரத்தினம் பெற்றார்.
முதல் மேயர்
ஈரோடு மாநகராட்சி, கடந்த 2008-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. 2009-ம் ஆண்டு முதல் மாநகராட்சியாக செயல்பட தொடங்கியது. அப்போது நகர் மன்ற தலைவராக இருந்த தி.மு.க.வின் குமார் கே.முருகேஸ் ஈரோடு மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மேயருக்கான செங்கோலை வழங்கி பதவியை வழங்கினார். இந்த காலக்கட்டத்தில் ஈரோடு மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன. இதுபோல் மேட்டூரில் இருந்து ஈரோட்டுக்கு குழாய் மூலம் குடிநீர் என்ற திட்டம் மாற்றப்பட்டது ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்துக்கான ஆலோசனையும் வைக்கப்பட்டது.
2-வது மேயர்
அதன்பின்னர், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் சேர்த்து ஈரோடு மாநகராட்சி விரிவு படுத்தப்பட்டது. 110 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 60 கவுன்சிலர்கள் என்ற வளர்ச்சியுடன் 2011-ம் ஆண்டு ஈரோடு மாநகராட்சியின் முதல் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் 60 வார்டு கவுன்சிலர்கள் தேர்தலும், மாநகராட்சி மேயரை வாக்காளர்கள் நேரடியாக தேர்ந்து எடுக்கும் முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட மல்லிகா பரமசிவம் மேயராக பதவி ஏற்றார். இந்த தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற்ற அ.தி.மு.க.வின் கே.சி.பழனிச்சாமி துணை மேயர் ஆனார்.
இந்த காலக்கட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்துக்கான ஆய்வுப்பணிகள் தொடங்கின. விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
பெரியார் மண்
10 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்       நடந்தது. இதில் 60 வார்டுகளில் 48 வார்டுகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. இந்த தேர்தல் கவுன்சிலர்கள் மூலம் மேயரை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கும் வகையில் தேர்தல் நடத்தப்பட்டது. எனவே தேர்தல் முடிந்த பிறகும் ஈரோடு மாநகராட்சியின் மேயர் யார் என்ற பரபரப்பு இருந்தது.
ஈரோடு நகராட்சியாக இருந்தபோது 1917-ம் ஆண்டு முதல் 1919-ம் ஆண்டு வரை தந்தை பெரியார் நகர்மன்ற தலைவராக இருந்தார். ஈரோடு நகராட்சியை விரிவு படுத்த வேண்டும் என்று நகர்மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர்  பெரியார். பின்னர், அவர் தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவராக மாறினார். அவரை பின்பற்றி, அவரது கொள்கைகளுக்கு உயிர் கொடுக்கும் வகையில் திராவிட கட்சிகள் தமிழகத்தின் ஆட்சியை பிடித்தன. எனவே ஈரோடு திராவிடக்கட்சிகளின் தலைநகராக மாறியது.
குறிப்பாக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஈரோட்டை குருகுலம் என்று அழைப்பது வழக்கம். அதுமட்டுமின்றி, பெரியாரின் மண் ஈரோடு மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது அவரது கொள்கைகளுக்கு கூடுதல் வலு சேர்ப்பதாக இருந்தது.
3-வது மேயர்
எனவே ஈரோடு மாநகராட்சியின் மேயர் பதவியை பிடிக்கும் பெண் யார் என்ற கேள்வியும், பரபரப்பும் தேர்தலை தொடர்ந்து இருந்தது. இந்தநிலையில் எஸ்.நாகரத்தினம் ஈரோடு மேயர் வேட்பாளர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதைத்தொடர்ந்து நேற்று நடந்த மறைமுக தேர்தலில் எஸ்.நாகரத்தினம் போட்டியின்றி ஈரோடு மேயர் ஆனார். ஈரோடு மாநகராட்சியின் 3-வது மேயராக பதவி ஏற்று உள்ள எஸ் நாகரத்தினம், 2-வது பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்று உள்ளார்.
பெரியார் கண்ட கனவுகளை நிறைவேற்ற கிடைத்திருக்கும் வாய்ப்புகளை எஸ்.நாகரத்தினம் நிறைவேற்றுவாரா...? ஈரோடு மாநகராட்சி பொலிவுறு மாநகரமாக திகழவும், மாநகர் இன்னும் விரிவடைந்து தொழில், வேலைவாய்ப்பு, கல்வி என்று அனைத்து துறையிலும் முன்னேற இவரின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story