உக்ரைனில் இருந்து அறந்தாங்கி வந்த மருத்துவ மாணவி
உக்ரைனில் இருந்து அறந்தாங்கி மருத்துவ மாணவி சொந்த ஊர் திரும்பினார்
அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே உள்ள துவரடிமனையை சேர்ந்தவர் அண்ணாதுரை. விவசாயி. இவரது மகள் பிரீத்தி (வயது 21). இவர், உக்ரைன் நாட்டில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருவதால் பிரீத்தி அங்கு தவித்து வந்தார். அவரை மீட்டுத்தரக்கோரி மாணவியின் பெற்றோர் மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் நேற்று மாணவி பிரீத்தி உக்ரைன் நாட்டில் இருந்து அறந்தாங்கி வந்தடைந்தார். அவரை பெற்றோர் உணர்ச்சி பொங்க வரவேற்றனர். உக்ரைனில் இருந்து சொந்த ஊர் திரும்பிய பிரீத்தி கூறியதாவது:-
உக்ரைன் நாட்டில் போர் நடந்த போது எங்களை கவனமாக இருக்க சொன்னார்கள். அங்கிருந்து பஸ் மூலமாக ருமேனியா வந்தோம். நாங்கள் பஸ்சில் ஏறியபோது ஏராளமானவர்கள் கூட்டம், கூட்டமாக பஸ்சை சூழ்ந்ததால் மிளகாய் பொடி, மிளகு பொடி தூவி கூட்டத்தை கலைத்து எங்களை பஸ்சில் ஏற்றிச்சென்று பாதுகாப்பாக தங்க வைத்து இருந்தனர். அங்கிருந்து மத்திய அரசு குழுவினர் இந்திய மாணவர்களை மும்பை அழைத்து வந்தனர். அங்கிருந்து சென்னை வந்தடைந்தோம். பின்னர், எங்களை சொந்த ஊருக்கு காரில் அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். என்னை போன்ற மாணவ-மாணவிகள் இன்னும் அங்கு உள்ளனர். அவர்களையும் மத்திய-மாநில அரசுகள் மீட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story