சேலம் மாவட்டத்தில் 26 பேரூராட்சிகளில் தலைவராக தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு-ஏத்தாப்பூர், தம்மம்பட்டி, கருப்பூரில் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு


சேலம் மாவட்டத்தில் 26 பேரூராட்சிகளில் தலைவராக தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு-ஏத்தாப்பூர், தம்மம்பட்டி, கருப்பூரில் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 5 March 2022 4:11 AM IST (Updated: 5 March 2022 4:11 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் உள்ள 26 பேரூராட்சிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் ஏத்தாப்பூர், தம்மம்பட்டி, கருப்பூர் பேரூராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள 26 பேரூராட்சிகளில் தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டனர். மேலும் ஏத்தாப்பூர், தம்மம்பட்டி, கருப்பூர் பேரூராட்சிகளில் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மறைமுக தேர்தல்
தமிழகத்தில் கடந்த மாதம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளில் 4 பேரூராட்சிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மல்லூர் பேரூராட்சியில் சுயேச்சை வேட்பாளர்கள் தலைவர், துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 26 பேரூராட்சிகளில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தலைவர்களாக தேர்வானார்கள்.
அவர்களின் விவரம் வருமாறு:-
ஆட்டையாம்பட்டி
அரசிராமணியில் தலைவராக காவேரி, துணைத்தலைவராக கருணாநிதி ஆகியோரும், அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியில் தலைவராக செல்வராஜ், துணைத்தலைவராக செல்வம் சூர்யா, ஆட்டையாம்பட்டி பேரூராட்சி தலைவராக முருகபிரகாஷ், துணைத்தலைவராக கிருஷ்ணவேணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ஏத்தாப்பூர் பேரூராட்சி தலைவராக தி.மு.க.வின் போட்டி வேட்பாளர் அன்பழகன் வெற்றி பெற்றார். கெங்கவல்லி பேரூராட்சியில் தலைவராக லோகாம்பாள், துணைத்தலைவராக மருதாம்மாள், இளம்பிள்ளை பேரூராட்சி தலைவராக நந்தினி, துணைத்தலைவராக ராஜமாணிக்கம், ஜலகண்டாபுரம் பேரூராட்சி தலைவராக காசி, துணைத்தலைவராக செந்தில்குமார் ஆகியோர் தேர்வானார்கள்.
கன்னங்குறிச்சி பேரூராட்சி தலைவராக குபேந்திரன், துணைத்தலைவராக ஜெயந்தி, கருப்பூர் பேரூராட்சி தலைவராக சுலோச்சனா, கீரிப்பட்டி பேரூராட்சி தலைவராக தேன்மொழி, துணைத்தலைவராக தமிழ்செல்வி, கொளத்தூர் பேரூராட்சி தலைவராக பாலசுப்பிரமணியம், துணைத்தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கோவிந்தம்மாள் ஆகியோர் போட்டியின்றி தேர்வானார்கள். கொங்கணாபுரம் பேரூராட்சி தலைவராக சுந்தரம், துணைத்தலைவராக கணேசன், மேச்சேரி பேரூராட்சி தலைவராக சுமதி, துணைத்தலைவராக ரேவதி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பனமரத்துப்பட்டி
ஓமலூர் பேரூராட்சி தலைவராக செல்வராணி, துணைத்தலைவராக புஷ்பா, பனமரத்துப்பட்டி பேரூராட்சி தலைவராக பரமேஸ்வரி, துணைத்தலைவராக பிரபுகண்ணன் ஆகியோர் தேர்வானார்கள்.
பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவராக பழனியம்மாள்,  துணைத் தலைவராக வெங்கடேசன், பி.என்.பட்டி பேரூராட்சி தலைவராக பொன்னுவேல், துணைத்தலைவராக தங்கம்மாள், பூலாம்பட்டி பேரூராட்சியில் தலைவராக அழகுதுரை, துணைத்தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முரளி தேர்வு செய்யப்பட்டனர். சங்ககிரி பேரூராட்சி தலைவராக மணிமொழி, துணைத்தலைவராக ஆர்.வி.அருண் பிரபு தேர்வு செய்யப்பட்டனர். செந்தாரப்பட்டி பேரூராட்சி தலைவராக லீலாராணி, துணைத்தலைவராக அமுதா, தம்மம்பட்டி பேரூராட்சி தலைவராக கவிதா தேர்வானார்கள்.
தெடாவூர் பேரூராட்சி தலைவராக வேலு, துணைத்தலைவராக மாதேஸ்வரி, தேவூர் பேரூராட்சி தலைவராக தங்கவேல், துணைத்தலைவராக தனராஜ்,  வாழப்பாடி பேரூராட்சி தலைவராக கவிதா, துணைத்தலைவராக சுயேச்சை வேட்பாளர் பழனிசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வீரகனூர் பேரூராட்சி தலைவராக கமலா, துணைத்தலைவராக அழகுவேல், வீரக்கல்புதூர் பேரூராட்சி தலைவராக தெய்வானைஸ்ரீ, துணைத்தலைவராக சுயேச்சை வேட்பாளரான வெங்கடேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
ஏத்தாப்பூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தி.மு.க. சார்பில் வேட்பாளராக பாபு என்கிற வெங்கடேசன் அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் பேரூராட்சி செயல் அலுவலர் விழி செல்வனிடம், தி.மு.க. வேட்பாளர் பாபு என்கிற வெங்கடேசன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து தி.மு.க. கவுன்சிலர் அன்பழகனும் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஒரே கட்சியை சேர்ந்த 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் தி.மு.க. போட்டி வேட்பாளர் அன்பழகன் வெற்றி பெற்றார்.
பின்னர் மதியம் 2 மணி அளவில் ஏத்தாப்பூர் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய முன்வரவில்லை. இதனால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
தம்மம்பட்டி
தம்மம்பட்டி பேரூராட்சியில் நேற்று மதியம் 2:30 மணிக்கு துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியமூர்த்தி அறிவித்தார். தொடர்ந்து மாலை 4 மணி வரை வேட்புமனுக்கள் வழங்கப்படவில்லை. மேலும் மொத்தம் உள்ள 15 கவுன்சிலர்களில் 7 பேர் மட்டுமே வாக்களிக்க வந்திருந்தனர். இதனால் போதிய கோரம் இல்லாததால் துணைத்தலைவர் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் அதிகாரி சத்தியமூர்த்தி அறிவித்தார்.
கருப்பூர்
கருப்பூர் பேரூராட்சி அலுவலகத்தில் மதியம் 2 மணி அளவில் துணைத்தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது. இதற்காக தி.மு.க.கூட்டணி சார்பில் காங்கிரசை சேர்ந்த கவுன்சிலர் சாந்தி மனுதாக்கல் செய்ய இருந்தார். ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலர் நீலாதேவி திடீரென அலுவலகத்தில் இருந்து வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.  இதைத்தொடர்ந்து மாலை 5.30 மணி அளவில் பேரூராட்சி அலுவலகத்தில் காத்திருந்த கவுன்சிலர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Next Story