மல்லூர் பேரூராட்சியில் ருசிகரம்: சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மனைவி தலைவர்-கணவர் துணைத்தலைவர்
மல்லூர் பேரூராட்சியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மனைவி லதா தலைவராகவும், அவரது கணவர் அய்யனார் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
பனமரத்துப்பட்டி:
மல்லூர் பேரூராட்சியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற மனைவி லதா தலைவராகவும், அவரது கணவர் அய்யனார் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
மல்லூர் பேரூராட்சி
மல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் 7 வார்டுகளிலும், அ.தி.மு.க. வேட்பாளர்கள் 5 வார்டுகளிலும், தி.மு.க. வேட்பாளர்கள் 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் மல்லூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதனால் 7-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற லதா மற்றும் 4-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவிப்பிரியா ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
லதா வெற்றி
தேர்தல் நடத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான சாந்தி முன்னிலையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 15 கவுன்சிலர்களில் 14 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். இதையடுத்து சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற லதா 10 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதன்படி சுயேச்சை வேட்பாளர் லதா மல்லூர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத்தலைவர்
இதனையடுத்து 1-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அய்யனார் பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மல்லூர் பேரூராட்சியில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லதா, துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அய்யனார் இருவரும் கணவன்-மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற கணவன், மனைவி இருவரும் தலைவர் மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது அரசியல் கட்சியினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story