சேலம் கன்னங்குறிச்சியில் பரிதாபம்:மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி


சேலம் கன்னங்குறிச்சியில் பரிதாபம்:மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி
x
தினத்தந்தி 5 March 2022 4:39 AM IST (Updated: 5 March 2022 4:39 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கன்னங்குறிச்சியில் மின்சாரம் தாக்கி இளம்பெண் பலியானார்.

சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி சின்னகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருடைய மனைவி சந்தியா. இந்த நிலையில் கடந்த ஆண்டு ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து சந்தியா கட்டிட வேலைக்கு சென்று தனது குழந்தைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் அவர் வீட்டில் உள்ள சுவரில் சாமி படங்கள் மற்றும் கணவரின் புகைப்படத்தை மாட்டி வணங்கி வந்தார். மேலும் அந்த படங்களுக்கு அலங்கார மின் விளக்குகள் மாட்டப்பட்டுள்ளன. படங்களுக்கு அருகில் இரும்பு பீரோவும் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின் விளக்குகளுக்கு சென்ற வயர் அறுந்து பீரோ மீது உரசிய நிலையில் கிடந்தது. இதை கவனிக்காத சந்தியா நேற்று மாலை பீரோவை திறந்தார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அலறிய அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வேகமாக ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக மின் இணைப்பை துண்டித்துவிட்டு சந்தியாவை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் சந்தியா ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story