நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயரானார் மகேஷ்


நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயரானார் மகேஷ்
x
தினத்தந்தி 5 March 2022 5:02 AM IST (Updated: 5 March 2022 5:02 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் முதல் மாநகராட்சியின் மேயராக தி.மு.க. வேட்பாளர் வக்கீல் மகேஷ் வெற்றி பெற்றார். துணை மேயராக மேரிபிரின்சி லதா தேர்வானார்.

நாகர்கோவில்:
நாகர்கோவில் முதல் மாநகராட்சியின் மேயராக தி.மு.க. வேட்பாளர் வக்கீல் மகேஷ் வெற்றி பெற்றார். துணை மேயராக மேரிபிரின்சி லதா தேர்வானார்.
நாகர்கோவில் மாநகராட்சி
நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதன் முறையாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது.
52 வார்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி (தி.மு.க.-24, காங்கிரஸ்-7, ம.தி.மு.க.-1) 32 இடங்களிலும், பா.ஜனதா 11 இடங்களிலும், அ.தி.மு.க. 7 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது.
மேயர் தேர்தல்
இந்தநிலையில் நேற்று காலையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான ஆஷா அஜித் முன்னிலையில் நடந்தது.
பா.ஜனதா சார்பில் போட்டியிட மீனாதேவ் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு பா.ஜனதா கவுன்சிலர் முத்துராமன் முன்மொழிந்தார். பா.ஜனதா கவுன்சிலர் ரமேஷ் வழிமொழிந்தார். அதைத்தொடர்ந்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வக்கீல் மகேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு காங்கிரஸ் கவுன்சிலர் நவீன் முன்மொழிந்தார். காங்கிரஸ் கவுன்சிலர் பால் அகியா வழிமொழிந்தார்.
வக்கீல் மகேஷ் வெற்றி
இதையடுத்து காலை 10.30 மணிக்கு கவுன்சிலர்கள் ஓட்டு போட்டனர். இதில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் வக்கீல் மகேஷ் 28 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 
பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட மீனாதேவ் 24 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதனால் பா.ஜனதா வேட்பாளரை விட 4 வாக்குகள் அதிகம் பெற்று வக்கீல் மகேஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
வாழ்த்து
மகேஷ் வெற்றி பெற்ற செய்தியை அறிந்ததும் அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட செயலாளருமான மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், ராஜன், தி.மு.க. மீனவரணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பசலியான் ஆகியோர் மாநகராட்சி கூட்ட அரங்குக்கு வந்தனர். 
அவர்கள் வக்கீல் மகேசுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பதவி ஏற்பு
பின்னர் நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக தேர்வு செய்யப்பட்ட மகேஷ், மாநகராட்சியின் கூட்ட அரங்கில் உள்ள மேடையில் மேயராக பதவி ஏற்றார். 
டபேதார் மேயர் வருகிறார், மேயர் வருகிறார் என்று குரல் கொடுக்க மகேஷ் மேயர் உடை அணிந்து வந்து பொறுப்பேற்றார். அவருக்கு மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் வெள்ளி செங்கோல் வழங்கியும், சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார். 
துணை மேயர் தேர்வு
பிற்பகல் 2.30 மணி அளவில் மாநகராட்சி துணை மேயருக்கான தேர்தல் நடந்தது. இதில் தி.மு.க. சார்பில் மேரி பிரின்சி லதா வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து தி.மு.க.வைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் போட்டி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்தார். இதற்கான வாக்குப்பதிவு நடந்தது. பின்னர் நடந்த வாக்கு எண்ணிக்கையில் மேரி பிரின்சி லதா 28 வாக்குகள் பெற்று துணை மேயராக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டி வேட்பாளராக களம் இறங்கிய ராமகிருஷ்ணன் 24 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
பின்னர் துணை மேயர் மேரி பிரின்சி லதா பதவி ஏற்றுக் கொண்டார். பின்னர் மேயர் மகேசும், துணை மேயர் மேரி பிரின்சி லதாவும் நாகர்கோவில் நகரில் உள்ள தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story