குமரியில் 8 பேரூராட்சிகளை பா.ஜனதா கைப்பற்றியது


குமரியில் 8 பேரூராட்சிகளை பா.ஜனதா கைப்பற்றியது
x
தினத்தந்தி 5 March 2022 6:13 AM IST (Updated: 5 March 2022 6:13 AM IST)
t-max-icont-min-icon

தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் குமரியில் 8 பேரூராட்சிகளை பா.ஜனதா கைப்பற்றியது. இரணியலில் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றது.

நாகர்கோவில்:
தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் குமரியில் 8 பேரூராட்சிகளை பா.ஜனதா கைப்பற்றியது. இரணியலில் குலுக்கல் முறையில் வெற்றி பெற்றது.
பா.ஜ.க. 8 பேரூராட்சிகளில் வெற்றி
குமரி மாவட்டத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க.வுக்கு அடுத்தபடியாக அதிக வார்டுகளை கைப்பற்றி 2-வது இடத்ைத பிடித்திருந்தது.
இந்தநிலையில் நேற்று தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் குமரி மாவட்டத்தில் மட்டும் 8 பேரூராட்சிகளில் பா.ஜ.க. வெற்றி வாகை சூடிஉள்ளது.
அதாவது இரணியல், இடைக்கோடு, கணபதிபுரம், மண்டைக்காடு, புதுக்கடை, தென்தாமரைகுளம், வில்லுக்குறி, வெள்ளிமலை ஆகிய 8 பேரூராட்சிகளை பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது. 
அதன் விவரம் வருமாறு:-
புதுக்கடை பேரூராட்சி
புதுக்கடை பேரூராட்சியில் உள்ள 15 கவுன்சிலர்களில் 8 வாக்குகளை பெற்று பா.ஜனதா கைப்பற்றியது. தலைவராக ஜாக்குலின் ரோஸ் கலா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுலோச்சனா 7 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 
புதுக்கடை பேரூராட்சியில் பா.ஜ.க.வுக்கு 6 கவுன்சிலர்களும், காங்கிரசுக்கு 5 கவுன்சிலர்களும், தி.மு.க.வுக்கு 2 கவுன்சிலர்களும், சுயேச்சைக்கு 2 கவுன்சிலர்களும் இருந்தனர்.
இதில் சுயேச்சை கவுன்சிலர்கள் 2 பேர் ஆதரவுடன் பா.ஜ.க. 8 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது.
குலுக்கல் முறையில் வெற்றி
இரணியல் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் பா.ஜ.க. 12 இடங்களையும், சுயேச்சை 3 இடங்களையும் கைப்பற்றியிருந்தது. நேற்று நடந்த தலைவர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க.வை சேர்ந்த ஸ்ரீகலா, அதே கட்சியை சேர்ந்த போட்டி வேட்பாளர் கீதா ஆகியோர் போட்டியிட்டனர்.
2 வேட்பாளர்களுக்கும் தலா 7 கவுன்சிலர்களின் ஓட்டுகள் விழுந்தன. ஒரு கவுன்சிலரின் வாக்கு சீட்டில் யாருக்கும் டிக் பண்ணாமல் வெற்று தாளாக இருந்தது. இதனால் அது செல்லாத ஓட்டாக கருதப்பட்டது.
இதனையடுத்து குலுக்கல் முறையில் தலைவர் யார்? என தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் ஸ்ரீகலா வெற்றி பெற்றார். ஸ்ரீகலா தான் பா.ஜ.க.வின் தலைமை வேட்பாளராக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வில்லுக்குறி
வில்லுக்குறி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் பா.ஜ.க. 6 இடங்களிலும், சுயேச்சை 6 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 2 இடங்களிலும், அ.தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
நேற்று நடந்த தலைவர் தேர்தலில் பா.ஜ.க. 9 கவுன்சிலர்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றது. இதனால் தலைவராக பா.ஜ.க.வை சேர்ந்த விஜயலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மண்டைக்காடு
மண்டைக்காடு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் பா.ஜ.க. 8 வார்டிலும், தி.மு.க. 4 வார்டிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 2 வார்டிலும் வெற்றி பெற்றிருந்தது.
நேற்று நடந்த தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக ராணி ஜெயந்தியும், தி.மு.க. வேட்பாளராக ராபர்ட் கிளாரன்சும் போட்டியிட்டனர். இதில் பா.ஜ.க.வை சேர்ந்த ராணி ஜெயந்தி 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ராபர்ட் கிளாரன்சுக்கு 6 வாக்குகள் கிடைத்தன.
தென்தாமரைகுளம்
தென்தாமரைகுளம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 3 இடங்களிலும், பா.ஜ.க. 4 இடங்களிலும், அ.தி.மு.க. 3 இடங்களிலும், சுயேச்சை 4 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
நேற்று நடந்த தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் கார்த்திகா பிரதாப் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர் ஆதரவுடன் பா.ஜ.க. வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஹெலன் பேபி சந்திரா 9 வாக்குகள் பெற்று துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பா.ஜ.க.வை சேர்ந்த தலைவருக்கு ஆதரவாக வாக்களித்ததால், துணை தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு பா.ஜ.க. உதவியது குறிப்பிடத்தக்கது. 
கணபதிபுரம்
கணபதிபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் தி.மு.க. 3 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், பா.ஜ.க. 5 இடங்களிலும், அ.தி.மு.க. 2 இடங்களிலும், சுயேச்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றது.
நேற்று நடந்த தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. பா.ஜ.க. வேட்பாளர் ஸ்ரீவித்யா 9 வாக்குகள் பெற்று
பேரூராட்சி தலைவரானார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் ஷீபா ஸ்டாலின் 6 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
காங்கிரஸ் ஆதரவுடன் வெற்றி
இடைக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 7 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2 இடங்களிலும், பா.ஜனதா 3 இடங்களிலும், சுயேச்சை 4 இடங்களிலும் வென்றிருந்தது.
நேற்று நடந்த தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் உமா தேவிக்கு 9 வாக்குகள் கிடைத்தன. தி.மு.க. வேட்பாளர் பிஜிக்கு 8 வாக்குகள் கிடைத்தன. ஒரு வாக்கு செல்லாதது என அறிவிக்கப்பட்டது. இதனால் 9 வாக்குகள் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் உமாதேவி இடைக்கோடு பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலரின் ஆதரவுடன் பா.ஜ.க. இடைக்கோடு பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றி உள்ளது. 3 இடங்களில் மட்டும் வெற்றி பெற்ற பா.ஜ.க., காங்கிரஸ் கவுன்சிலர்களின் ஆதரவுடன் தலைவர் பதவியை கைப்பற்றிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
 பா.ஜனதாவுக்கு ஆதரவு
வெள்ளிமலை பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் பா.ஜ.க. 6, சுயேச்சைகள் 6, கம்யூனிஸ்டு 2 மற்றும் தி.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தது. இதில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் இருந்தது. 
ஒரு இடத்தில் தி.மு.க. வெற்றி பெற்றிருந்தாலும் சுயேச்சைகள் ஆதரவுடன் இந்த பேரூராட்சியை கைப்பற்ற திட்டமிட்டது. இதற்காக தி.மு.க. சார்பில் தலைவர் பதவி வேட்பாளராக சுயேச்சை கவுன்சிலர் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் அவர் நேற்று தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்யவில்லை. பா.ஜ.க. வேட்பாளர் பாலசுப்பிரமணியத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் மொத்தம் 11 கவுன்சிலர்கள் தேர்தலில் வாக்களிக்க வந்தனர். ஆனால் 4 பேர் வரவில்லை. வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் வெள்ளிமலை பேரூராட்சி தலைவராக பாலசுப்பிரமணியன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

Next Story