தர்மபுரி நகராட்சி தலைவராக லட்சுமி நாட்டான் மாது வெற்றி


தர்மபுரி நகராட்சி தலைவராக லட்சுமி நாட்டான் மாது வெற்றி
x
தினத்தந்தி 5 March 2022 6:14 AM IST (Updated: 5 March 2022 6:14 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த லட்சுமி நாட்டன் மாது, துணைத்தலைவராக நித்யா அன்பழகன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

தர்மபுரி:-
தர்மபுரி நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் தலைவராக தி.மு.க.வைச் சேர்ந்த லட்சுமி நாட்டன் மாது, துணைத்தலைவராக நித்யா அன்பழகன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
நகராட்சி மறைமுக தேர்தல்
தர்மபுரி நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உறுப்பினர் பதவிக்கு நடந்த தேர்தலில் தி.மு.க. 18 வார்டுகளிலும், அ.தி.மு.க. 13 வார்டுகளிலும், தி.மு.க.வின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற 33 பேரும் கடந்த 2-ந் தேதி நகராட்சி கவுன்சிலர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் தர்மபுரி நகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நேற்று காலை நடைபெற்றது. நகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சித்ரா சுகுமார் மறைமுக தேர்தலை நடத்தினார். தேர்தல் பார்வையாளர் பாபு, நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் சரவணபாபு ஆகியோர் முன்னிலையில் தலைவர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த 27-வது வார்டு கவுன்சிலர் லட்சுமி நாட்டான் மாது, அ.தி.மு.க.வைச் சேர்ந்த 33-வது வார்டு கவுன்சிலர் ராஜாத்தி ரவி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வாக்குப்பதிவு
இதைத் தொடர்ந்து மறைமுக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தி.மு.க. வேட்பாளர் லட்சுமி நாட்டான் மாது 20 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ராஜாத்தி ரவி 13 வாக்குகள் பெற்றார். இதன்பின்னர் தர்மபுரி நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட லட்சுமி நாட்டான் மாதுவுக்கு நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
தலைவராக வெற்றி பெற்ற லட்சுமி நாட்டான் மாதுவுக்கு நகராட்சி அலுவலகம் அருகில் தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, நகராட்சி தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் எம்.பி.க்கள் எம்.ஜி.சேகர், தாமரைச்செல்வன், நகர பொறுப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நகராட்சித் தலைவர் கூறுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியில் தர்மபுரி நகர வளர்ச்சிக்கு அனைவரின் ஒத்துழைப்புடன் பார் படுவேன் என்று கூறினார்.
துணைத் தலைவர் தேர்தல்
இதைத்தொடர்ந்து மதியம் தர்மபுரி நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. தி.மு.க. சார்பில் 29-வது வார்டு கவுன்சிலர் நித்யா அன்பழகன், அ.தி.மு.க. சார்பில் 23-வது வார்டு கவுன்சிலர் பி.நாகராஜன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பின்னர் நடைபெற்ற வாக்குப்பதிவில் தி.மு.க. வேட்பாளர் நித்யா அன்பழகன் 21 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பி.நாகராஜன் 12 வாக்குகள் பெற்றார்.
நகராட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நித்யா அன்பழகனுக்கு நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பூங்கொத்தும் கொடுத்தும், பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். நகராட்சி துணை தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒரு கவுன்சிலர் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களித்துள்ளது ்குறிப்பிடத்தக்கது.

Next Story