சென்னை விமான நிலையத்தில் தொழில் அதிபரிடம் 15 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் தொழில் அதிபரிடம் 15 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 March 2022 7:34 AM IST (Updated: 5 March 2022 7:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் தொழில் அதிபரிடம் 15 துப்பாக்கி குண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து மதுரைக்கு பயணிகள் விமானம் சென்றது. முன்னதாக அதில் செல்ல வந்தவர்களின் உடைமைகளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது தூத்துக்குடியை சேர்ந்த கிருஷ்ணகுமார் (வயது 37) என்பவரது கைப்பையை ‘ஸ்கேன்’ செய்தபோது அதில் வெடிகுண்டுகள் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது. பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கைப்பையை தனியே எடுத்து வைத்தனா்.

கிருஷ்ணகுமாரை அழைத்து பையை திறந்து பார்த்தனர். அதில் கைத்துப்பாக்கியில் பயன்படுத்தும் 15 குண்டுகள் இருந்ததை கண்டனா். அவை ஒவ்வொன்றும் 7.53 எம்.எம். ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கி குண்டுகள். அந்த துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்த பாதுகாப்பு அதிகாரிகள், கிருஷ்ணகுமாரின் விமான பயணத்தையும் ரத்து செய்தனா்.

விசாரணையில் தொழில் அதிபரான கிருஷ்ணகுமார், தனது பாதுகாப்புக்காக முறையான உரிமம் பெற்று கைத்துப்பாக்கி வைத்திருப்பதாகவும், தூத்துக்குடியில் இருந்து காரில் வந்தபோது இந்த கைப்பையை எடுத்து வந்ததாகவும், அதில் துப்பாக்கி குண்டுகள் இருந்ததை கவனிக்கவில்லை எனவும், தூத்துக்குடிக்கு மதுரை வழியாக விமானத்தில் செல்ல வந்தபோது தவறுதலாக இந்த பையை எடுத்து வந்துவிட்டதாகவும் கூறினாா். பின்னர் விமான நிலைய போலீசாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். உரிய ஆவணங்கள் இருந்ததால் அவரிடம் எழுதி வாங்கி கொண்டு அனுப்பிவைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story