உளவுப்பிரிவு போலீஸ்காரர் மீது தாக்குதல் - பால் வியாபாரி கைது
பஸ்படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை கண்டித்த உளவுப்பிரிவு போலீஸ்காரரை தாக்கிய பால் வியாபாரி கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னை டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்தில் உளவுப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் நிக்கோலஸ் (வயது 42). இவர் நேற்று காலை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் பணி நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாநகர பஸ் ஒன்று அந்த வழியாக வந்தது. அந்த பஸ்சில் சில மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி வந்தனர். பஸ் டிரைவர் அவர்களை கண்டித்தும் பலன் இல்லை. இதனால் பஸ் கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் நிறுத்தப்பட்டது.
போலீஸ்காரர் நிக்கோலஸ், பஸ்படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை கண்டித்தார். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்போவதாக எச்சரித்தார். அப்போது மாணவர்களுக்கு ஆதரவாக பேசியபடி அங்கு வந்த பால் வியாபாரி ஆனந்தன் என்பவர், போலீஸ்காரர் நிக்கோலசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியது. போலீஸ்காரர் நிக்கோலசை, ஆனந்தன் அடித்து உதைத்து தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த நிக்கோலஸ், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக அவர் டி.பி.சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனந்தன் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story