மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி அவதார திருநாள் ஊர்வலம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு


மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி அவதார திருநாள் ஊர்வலம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 5 March 2022 9:13 AM IST (Updated: 5 March 2022 9:13 AM IST)
t-max-icont-min-icon

மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி அவதார திருநாள் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவொற்றியூர், 

சென்னை மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதியின் 190-வது ஆண்டு அவதார திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதியின் பக்தர்கள் பழைய வண்ணாரப்பேட்டை ராமநாயக்கன் தெருவில் உள்ள தங்கக்கிளி திருமண மண்டபத்தில் இருந்து இரண்டு குதிரைகள் பூட்டிய அலங்கார சாரட் வண்டியில் அய்யா அருளிச் செய்த அகில திரட்டு ஆகமத்தை வைத்து ஊர்வலமாக சென்றனர்.

காலை 5.30 மணியளவில் புறப்பட்ட ஊர்வலத்தை சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், லதா நாராயணன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் திருநாமக்கொடி ஏந்தியபடி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா அரஹர, அய்யா அரஹர என்று அய்யாவின் நாமத்தை உச்சரித்தபடி சாரட் வண்டியின் பின்னால் பாதயாத்திரையாக சென்றனர்.

ஊர்வலம் நல்லப்பவாத்தியார் தெரு, ராமானுஜர் தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக சென்றது. முன்னதாக ஊர்வலம் செல்லும் வழியில் டி.எஸ்.எஸ். நாடார் ஐக்கிய சங்க தலைவர் ஆர்.பி.மனோகரன் மற்றும் நிர்வாகிகள் பக்தர்களை வரவேற்று சிற்றுண்டி வழங்கினர். செல்லும் வழியெங்கும் உபய தாரர்கள் நீர், மோர் வழங்கினர். மதியம் 12 மணியளவில் ஊர்வலம் மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியை சென்றடைந்தது. மாலையில் ஊஞ்சல் சேவை, தாலாட்டு, சரவிளக்கு பணிவிடை மற்றும் அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் வைகுண்ட ஜோதி ஏற்றுதல், இனிமம் வழங்குதல் நிகழ்ச்சியுடன் அய்யா அவதார திருநாள் நிறைவடைந்தது.

Next Story