ஆரணி பேரூராட்சியில் பெண் கவுன்சிலர் கடத்தல் - குழந்தையுடன் கணவர் தர்ணா


ஆரணி பேரூராட்சியில் பெண் கவுன்சிலர் கடத்தல் - குழந்தையுடன் கணவர் தர்ணா
x
தினத்தந்தி 5 March 2022 9:44 AM IST (Updated: 5 March 2022 9:44 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி பேரூராட்சியில் பெண் கவுன்சிலர் கடத்தப்பட்டதையடுத்து அவரது கணவர் குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பேரூராட்சியில் நேற்று காலை தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பேரூராட்சி தலைவராக ராஜேஸ்வரி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று மதியம் 2.30 மணிக்கு நடைபெற்றது. இதில், கண்ணதாசனை துணைத் தலைவர் வேட்பாளராக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் பேரூராட்சி அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த பெண் கவுன்சிலர்களை சிலர் காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதில், 3-வது வார்டு சுயேச்சை பெண் கவுன்சிலர் பிரபாவதியையும் கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து பிரபாவதியின் கணவர் சேஷாத்திரி ஆரணி பேரூராட்சி அலுவலகம் எதிரே தனது குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மேலும், தனது மனைவியை உடனடியாக மீட்டுத்தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரிடம் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் ஆரணி போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும், பிரபாவதியை மீட்டுவர போலீசார் நாலாபுறமும் விரைந்து சென்றனர். சிறிது நேரத்தில் பேரூராட்சி அலுவலகம் அருகே பிரபாவதியை சிலர் கொண்டு வந்து விட்டுவிட்டு சென்றனர். அதன் பின்னர் சேஷாத்ரி தனது போராட்டத்தை கை விட்டுவிட்டு தனது மனைவியுடன் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்றார். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story