திருமழிசை பேரூராட்சி தேர்தலில் 2 ஓட்டுகள் செல்லாது என அறிவித்ததால் அ.தி.மு.க.வினர் ரகளை


திருமழிசை பேரூராட்சி தேர்தலில் 2 ஓட்டுகள் செல்லாது என அறிவித்ததால் அ.தி.மு.க.வினர் ரகளை
x
தினத்தந்தி 5 March 2022 10:48 AM IST (Updated: 5 March 2022 10:48 AM IST)
t-max-icont-min-icon

திருமழிசை பேரூராட்சி தேர்தலில் 2 ஓட்டுகள் செல்லாது என அறிவித்ததால் அ.தி.மு.க.வினர் ரகளையில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர், 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19-ந்தேதி் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த மாதம் 22-ந் தேதி நடைபெற்று கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். திருவள்ளூரை அடுத்த திருமழிசையில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. திருமழிசை பேரூராட்சியில் உள்ள 15 வார்டில், தி.மு.க.- 6 வார்டிலும், அ.தி.மு.க. 6 வார்டிலும், ம.தி.மு.க., பா.ம.க, சுயேச்சைகள் தலா ஒருவரும் வெற்றி பெற்று இருந்தனர். திருமழிசை பேரூராட்சியின் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் 4-வது வார்டு உறுப்பினரான வடிவேலு என்பவரும், அ.தி.மு.க. சார்பில் 7-வது வார்டு உறுப்பினருமான ரமேஷ் என்பவரும் போட்டியிட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று திருமழிசை பேரூராட்சியின் தலைவர், துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை திருமழிசை பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருமழிசை பேரூராட்சியின் செயல் அலுவலருமான ரவி தலைமையில் நடத்தப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலர் ரவி தி.மு.க. வேட்பாளர் வடிவேலு 7 ஓட்டுகளும், அ.தி.மு.க. வேட்பாளரான ரமேஷ் 6 ஓட்டுகள் பெற்றார் எனவும், 2 ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவித்து, தி.மு.க. வேட்பாளர் வடிவேலு வெற்றிபெற்றார் என தெரிவித்து விட்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றார். என்ன காரணத்துக்காக செல்லாத ஓட்டுக்கள் ஆக உள்ளது என கூறுமாறு அ.தி.மு.க.வினர் செயல் அலுவலரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருமழிசை பேரூராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் செயல் அலுவலர் எந்த பதிலும் சொல்லாமல் வேறு அறைக்கு சென்று அந்த அறையை மூடிக்கொண்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. வேட்பாளர் ரமேஷ் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்களான பிரியா, வேணுகோபால், லதா, ஜெயசுதா, பிரதீப், வேலு, பா.ம. க உறுப்பினர் ராஜேஷ் என 8 பேரும் செல்லாத ஓட்டுக்கள் போட்டப்பட்டு உள்ளதாக கூறி ஒரு தலைபட்சமாக தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல் அலுவலர் ரவி செயல்படுவதாகவும் கூறி செல்லாத ஓட்டுக்களை காண்பிக்குமாறு கூறி ரகளையில் ஈடுபட்டனர்.

இதை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அ.தி.மு.க. வேட்பாளர் ரமேசை தரதரவென்று இழுத்து பேரூராட்சி அலுவலகத்தின் உள்ளே இருந்த வேனில் ஏற்றி அவரை கைது செய்து வெளியே கொண்டு செல்ல முயன்றனர். இதைக்கண்ட அங்கு திரண்டிருந்த அ.தி.மு.க. பூந்தமல்லி ஒன்றிய செயலாளர் கௌதமன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் முருகன், துணை செயலாளர் தென்றல், மாவட்ட அவைத்தலைவர் தி.பா.கண்ணன் ஆகியோர் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டு அ.தி.மு.க. வேட்பாளர் ரமேஷை கைது செய்து அழைத்துச் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் போலீஸ் வாகனத்தை முன்பு சாலையில், படுத்துப் புரண்டு 50-க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாகனத்தை செல்லவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதை அறிந்த முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பென்ஜமின் தலைமையில் பூந்தமல்லி முன்னாள் எம்.எல்.ஏ மணிமாறன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் திருமழிசை பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். அப்போது திடீரென மழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் முன்னாள் அமைச்சர் பென்ஜமின் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பேரூராட்சி செயல் அலுவலர் ரவி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு தி.மு.க. வெற்றி பெற்றதாக அறிவித்ததை கண்டித்தும், மறு தேர்தல் நடத்த வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார் அ.தி.மு.க. வேட்பாளர் ரமேசை விடுவித்தனர். இதனிடையே தி.மு.க. வேட்பாளரான வடிவேலு பேரூராட்சி செயல் அலுவலரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் பென்ஜமின் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு பேரூராட்சி அலுவலகத்திலிருந்து பேரணியாக சென்றனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் நேற்று மதியம் பேரூராட்சி துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மோதல் காரணமாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக கூறி அதற்கான அறிவிப்பையும் திருமழிசை பேரூராட்சி அலுவலகத்தின் முன்பு அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.

Next Story