வளர்ச்சியை நோக்கி பயணிக்குமா திருப்பூர் மாநகரம்


வளர்ச்சியை நோக்கி பயணிக்குமா திருப்பூர் மாநகரம்
x
தினத்தந்தி 5 March 2022 4:16 PM IST (Updated: 5 March 2022 4:16 PM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சியை நோக்கி பயணிக்குமா திருப்பூர் மாநகரம்

ுதிய மாமன்ற கவுன்சிலர்கள் பதவியேற்ற நிலையில் திருப்பூர் மாநகரில் வளர்ச்சி பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், தொழில்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.
மக்கள் உயிர் வாழ அடிப்படை தேவைகளாக உணவு, உடை, உறைவிடம் ஆகிய மூன்றும் அத்தியாவசியம் என முந்தைய காலங்களில் கூறப்பட்டது. ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் பொருளாதார வளர்ச்சி, நாகாீக வளர்ச்சியோடு ஒப்பிடும் போது உயிர் வாழ அடிப்படை தேவைகள் என பட்டியல் எடுத்தால் அது மிக நீண்டு கொண்டு செல்லும் என்பது தான் உண்மை. ஆம், பொருளாதார தேவைகளும், தொழில்நுட்ப வளர்ச்சியும், விஞ்ஞான வளர்ச்சியும் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் மனிதர்களின் அடிப்படை தேவைகளும் அதிரித்துக் கொண்டு தான் உள்ளது.
பின்னலாடை நகரம், டாலர் சிட்டி, வந்தாரை வாழ வைக்கும் நகரம், அந்நிய செலாவணியை அதிகம் ஈட்டும் நகரம் என பல்வேறு வகையிலும் புகழப்படும் திருப்பூரும், இங்குள்ள மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதே உண்மை.
இந்தநிலையில் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ளது. புதிதாக உள்ளாட்சி பிரதிநிதிகளும் பதவியேற்றுள்ளனர். இதனால் திருப்பூரின் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து மாநகர மக்கள், தொழில் துறையினரின் மத்தியில் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக வளர்ச்சித்திட்ட பணிகள் மிகவும் தொய்வடைந்த நிலையில் இருந்ததால் அடிப்படை வசதிகளே முழுமையாக மக்களை சென்றடையாத நிலை தொடர்ந்்தது. ஆனால் தற்போது புதிய மாமன்ற உறுப்பினா்களின் பணி விரைவு பெறும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளில் மந்த நிலை, தரமற்ற பணி என குற்றச்சாட்டுக்கள் தொடர்வதால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை விரைவுபடுத்த வேண்டும், பல இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முழுமை பெறாத நிலையில் சாலை, சாக்கடை கால்வாய், குடிநீர் குழாய்களில் உடைப்பு என அவலங்கள் தொடர்வதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதேபோல், சுகாதாரம், குடிநீா் தட்டுப்பாடு, தரமான சாலை வசதி, போதிய அளவிலான கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு வசதிகளை மேம்படுத்துவது, குப்பைகள் தேங்காத வண்ணம் துப்புரவு பணிகளை முடுக்கிவிடுவது, பள்ளிகளின் தரம் உயர்த்தி மாணவர்களின் நலன் காப்பது, அங்கன்வாடி மைய கட்டிடங்களை சீரமைத்து புதுப்பிப்பது, சமுதாய கழிப்பிடங்களை சீரமைத்து பொது சுகாதாரத்தை பேணிக்காப்பது ஆகிய அடிப்படை பிரச்சினைகளில் முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும். தொழில் நகரான திருப்பூர் மாநகரில் போதிய சாலை வசதிகளை விரிவுபடுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கூடுதல் பாலங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களின் நலன் காக்க சிறப்பு திட்டங்கள், அவர்களுக்கான குடியிருப்புகளை உருவாக்குவது என்பன உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும், அந்நிய செலாவணிைய அதிகளவு ஈர்க்கும் திருப்பூர் மாநகரில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும்  என்பதுவும் பொதுமக்கள், தொழில்துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. திருப்பூரின் மையப்பகுதியை கடக்கும் முக்கிய நீர் ஆதாரமான நொய்யல் ஆறு, நல்லாறு ஆகியவற்றை தூர்வாரி குப்பை, கழிவுநீர் கலக்காதவாறும், சாயக்கழிவு, ரசாயன கழிவுகளில் இருந்து பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போதிய போக்குவரத்து வசதி, ஊழல், லஞ்சம் இல்லாத நிர்வாகம், வெளிமாநில தொழிலாளர்களை முறைப்படுத்தி அவர்களின் நலனிலும் அக்கறை செலுத்துவது போன்ற பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். 
புதிதாக பதவியேற்றுள்ள மாமன்ற உறுப்பினர்கள் தாங்கள் மக்கள் சேவகர்கள் என்பதை முதன்மையாக கருதி, மக்களின் நலனை மேம்படுத்த தங்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பது திருப்பூர் மாநகர மக்கள் மற்றும் தொழில் துறையினரின் அதீத எதிர்பார்ப்பாகவும், கனவுகளாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story