41 மூட்டைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்; 5 பேர் கைது
கழுகுமலை அருகே 41 மூட்டைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கழுகுமலை:
கழுகுமலை அருகே தனியார் தோட்டத்தில் 41 மூட்டைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் ரோந்து
கழுகுமலை போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கழுகுமலையில் இருந்து கொக்கு குளம் செல்லும் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் காரில் சிலர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் பிடித்து விசாரித்ததில், அந்த மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 15 கிலோ எடை கொண்ட 41 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
5 பேர் கைது
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கழுகுமலை செந்தில் நகரைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் சந்திரசேகர் (வயது 38), கழுகுமலை திருமாளிகை தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் ஆரோக்கிய அமல்ராஜ் (37), வட்ட தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் நாராயண குமார் (37), ஆறுமுகமும் நகரைச் சேர்ந்த முனியப்பன் மகன் சந்தனமாரி முத்து (30), தோட்ட உரிமையாளரான தென்காசி மாவட்டம் பழங்கோட்டை அக்ரஹாரம் தெருவை சேர்ந்த ராஜ் மகன் கோபிநாத் (34) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இவர்களது கூட்டாளியான மதுரையைச் சேர்ந்த மதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story