மோடியின் முயற்சியால் நாங்கள் உயிருடன் நாடு திரும்பினோம்


மோடியின் முயற்சியால் நாங்கள் உயிருடன் நாடு திரும்பினோம்
x
தினத்தந்தி 5 March 2022 5:44 PM IST (Updated: 5 March 2022 5:44 PM IST)
t-max-icont-min-icon

மோடியின் முயற்சியால் நாங்கள் உயிருடன் நாடு திரும்பினோம்

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி. கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி தீபா. இவர்களுடைய 2வது மகன் ஸ்ரீதர் வயது 20. இவர் உக்ரைன் நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் இருந்து மருத்துவ மாணவர் ஸ்ரீதர் திருமுருகன்பூண்டிக்கு திரும்பினார். 
அவரை குடும்பத்தினர் கட்டிப்பிடித்து கண்ணீர் மல்க மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். இந்த நிலையில் மாணவர் ஸ்ரீதரை பா.ஜ.க. திருமுருகன்பூண்டி மண்டல தலைவர் சண்முகபாபு தலைமையில் பொதுச்செயலாளர் ஜெயபிரகாஷ், மாவட்ட தொழிற்பிரிவு செயலாளர் மனோகரன், மகளிரணி தலைவி தமிழரசி உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்று, வாழ்த்து தெரிவித்தனர். 
பின்னர் மாணவர் ஸ்ரீதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:
 இந்தியா வர முயற்சி
நான் உக்ரைன் நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்து வருகிறேன். 2-ம் ஆண்டு படிப்புக்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அங்கு சென்றேன். உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்க உள்ளது என்ற அறிவிப்பு வெளியான உடனேயே நான் இந்தியாவுக்கு வருவதற்காக கடந்த 2-ந்தேதி விமான டிக்கெட் முன்பதிவு செய்தேன். ஆனால் கடந்த 24ந்தேதி முதல் உக்ரைன் தலைநகர் கீவ் விமானநிலையம் தாக்கப்பட்டு, செயல்பாட்டை இழந்தது. 
இதற்கிடையே எனது பெற்றோர் என்னிடம் பேசி பாதுகாப்பாக இருக்குமபடியும், உடனடியாக இந்தியாவுக்கு திரும்பும்படியும், வலியுறுத்தினார்கள். மேலும் இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர். நான் உக்ரைன் நாட்டின் வடக்கு பகுதியில் இருந்ததால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனாலும் இந்தியா வருவதற்கான முயற்சியை மேற்கொண்டபோது பெரிய அளவில் உதவி கிடைக்கவில்லை. 
பிரதமரின் முயற்சியால்
இந்த நிலையில் மத்திய அரசின் தூதரகம் மூலமாக எங்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்குமாறு உத்தரவு வந்தது. இதன் பேரில் நானும், என்னுடன் தமிழ்நாட்டை சேர்ந்த 40 பேர் உள்பட 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ் மூலமாக உக்ரைனில் இருந்து அண்டை நாடான அங்கேரிக்கு சென்றோம். பின்னர் அங்கிருந்து 2 விமானங்கள் மூலமாக டெல்லிக்கு பாதுகாப்பாக திரும்பினோம். உக்ரைன் மற்றும் அங்கேரி உள்ளிட்ட நாடுகளில் இந்திய நாட்டின் தேசியக்கொடியை நாங்கள் காட்டியபோது மிகவும் மரியாதை கொடுத்ததுடன், உதவியும் செய்தனர். 
பிரதமர் நரேந்திர மோடியின் முழு முயற்சியால் நாங்கள் உயிருடன் நாடு திரும்பி உள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும், மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
இவ்வாறு மாணவர் ஸ்ரீதர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

Next Story