வனவிலங்குகள் தாகம் தீர்க்க காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்


வனவிலங்குகள் தாகம் தீர்க்க காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 March 2022 8:08 PM IST (Updated: 5 March 2022 8:08 PM IST)
t-max-icont-min-icon

முதுமலை வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளதால், வனவிலங்குகளின் தாகம் தீர்க்க காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி

முதுமலை வனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு உள்ளதால், வனவிலங்குகளின் தாகம் தீர்க்க காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கடும் வறட்சி 

மலைமாவட்டமான நீலகிரியில் 65 சதவீத வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டுயானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த ஆண்டில் ஊட்டி, மஞ்சூர், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாக இருந்ததால், பல இடங்களில் புற்கள் கருகி காய்ந்து விட்டன. மரங்களில் இலைகள் உதிர்ந்து காணப்படுகிறது. 

இதனால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது.  குறிப்பாக முதுமலை வனப்பகுதிகள் பசுமையை இழந்து வறட்சியான காலநிலை போல் காட்சி அளிக்கிறது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன. பசுமை புற்கள் இல்லாததால் உணவு தேடி குடியிருப்புக்குள் புகும் அபாயம் உள்ளது. 

காமராஜர் சாகர் அணை

ஆண்டுதோறும் வறட்சி காரணமாக வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், வனவிலங்குகளை பாதுகாக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக வனவிலங்குகளின் தாகத்தை தீர்ப்பதற்காக காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

தற்போது இதுவரை அணை திறக்கப்படவில்லை. இதனால் சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது. முதுமலை வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் ஊட்டி அருகே காமராஜ் சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

தாகம் தீர்க்க உதவும்

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:- முதுமலை வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் வறட்சியால் இடம்பெயர்ந்து சுற்றித்திரிந்து வருகிறது. 

வனவிலங்குகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் மின்வாரியம் காமராஜ் சாகர் அணையை உடனே திறந்துவிட வேண்டும். இந்த தண்ணீர் கால்வாய் வழியாக கல்லட்டி நீர்வீழ்ச்சி,வாழைத்தோட்டம், மாவனல்லா, செம்மநத்தம், சீகூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக செல்கிறது. அடர்ந்த வனப்பகுதி நடுவே செல்வதால் தண்ணீரை தேடி அலையும் வனவிலங்குகள், இந்த தண்ணீரை குடித்து தாகம் தீர்க்க உதவும். மேலும் இந்த தண்ணீர் மசினகுடி, சிங்காரா மின் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story