மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற பதிவு செய்யும் முகாம்
ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் முகாமை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் முகாமை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
தேசிய அடையாள அட்டை
ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடந்து வந்தது. முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது அன்றைய தினமே, மருத்துவச் சான்றின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டு, அவர்களுக்கு மாநில மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள், வீடு கட்ட ஆணைகள், தமிழ்நாடு முதல் அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கான அடையாள அட்டைகள், பென்சன், போன்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மத்திய அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் பெற்றிட தேசிய அடையாள அட்டை மிகவும் முக்கியமானது. இந்த அட்டையை தொலைத்து விட்டாலும் கூட இதனை எளிய முறையில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்டத்திலுள்ள 18 குறுவட்டங்களில் தேசிய அடையாள அட்டை முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு நடக்கும் முகாமானது 9-வது முகாமாகும். இந்த முகாம்களின் முக்கிய நோக்கம் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தேசிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.
பதிவேற்றம் செய்யப்படும்
மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் வரவில்லை என்றால், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கலாம். அவர்களின் மூலமாக விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்தில், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
முகாமில் ஏற்கனவே பதிவு செய்த மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வரப் பெற்றுள்ளதை கலெக்டர் வழங்கினார். முகாமில் மாற்றுத் திறனாளி நல அலுவலர் சரவண குமார், முதன்மை கல்வி அலுவலர் உஷா, தாசில்தார் ஆனந்தன் மற்றும் வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story