சாராயம் கடத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதி நெல் அறுவடை எந்திர டிரைவர் பலி
நாகையில் சாராயம் கடத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதி நெல் அறுவடை எந்திர டிரைவர் பலியானார். தப்பி ஓடியவர்களை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் சாராயம் கடத்தி வந்த மோட்டார் சைக்கிள் மோதி நெல் அறுவடை எந்திர டிரைவர் பலியானார். தப்பி ஓடியவர்களை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல் அறுவடை எந்திர டிரைவர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்த ராமஜெயம் மகன் அருள்மொழி (வயது 35). அறுவடை எந்திர டிரைவர். இவர் நாகை மாவட்டம் திட்டச்சேரி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வயல்களில் எந்திரம் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அருள்மொழி, தனது மோட்டார் சைக்கிளில் புத்தூர் ரவுண்டானாவில் இருந்து திட்டச்சேரிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதியது
பாலையூர் அருகே சென்றபோது, எதிரே காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்த மோட்டார் சைக்கிள், அருள்மொழி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சாராய மூட்டைகளுடன் வந்த மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. சாராயம் கடத்தி வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த விபத்தில், படுகாயம் அடைந்த அருள்மொழியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அருள்மொழி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் வலைவீச்சு
இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராயம் கடத்திய வந்து விபத்தை ஏற்படுத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story