விருத்தாசலம் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகைகள் கொள்ளை பக்கத்து வீடுகளை வெளிப்புறமாக பூட்டி மர்மநபர்கள் கைவரிசை


விருத்தாசலம் அருகே  ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகைகள் கொள்ளை  பக்கத்து வீடுகளை வெளிப்புறமாக பூட்டி மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 5 March 2022 10:10 PM IST (Updated: 5 March 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே பக்கத்து வீடுகளை வெளிப்புறமாக பூட்டிவிட்டு ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.8 லட்சம் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகி்ன்றனர்.


விருத்தாசலம், 

விருத்தாசலம் அருகே உள்ள சாத்துக்கூடல் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 65). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவருக்கு செல்வம்(37), செல்வகுமாரன்(31) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 

இதில் செல்வம் தற்போது ரெயில்வே ஊழியராக இருப்பதால் ரெயில்வே குடியிருப்பில் தங்கி உள்ளார். இவர்களுக்கு சாத்துக்கூடல் மேல்பாதி கிராமத்தில் ஒரே வளாகத்தில் 3 வீடுகள் உள்ளன. 

வீடுகளில் வெளிப்புறமாக...

இந்த நிலையில் செல்வகுமரன் ஒரு வீட்டிலும், சுந்தரம் மற்றொரு வீட்டிலும் நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்தனர். மற்றொரு வீட்டை பூட்டி வைத்திருந்தனர். நேற்று காலையில் சுந்தரம் எழுந்து வெளியே வர முயன்றார். ஆனால் அவரது வீட்டின் முன்பக்க கதவு வெளிப்புறமாக பூட்டியிருந்தது. 


உடனே அவர் தனது மகன் செல்வகுமரனுக்கு போன் செய்து, கதவை திறக்க வருமாறு அழைத்தார். அவரும் எழுந்து வீட்டின் கதவை திறக்க முயன்றபோது அவரது வீடும் வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், பக்கத்து வீட்டில் வசிப்பவர்களை உதவிக்காக அழைத்தனர். இதையடுத்து அவர்கள், 2 வீடுகளிலும் கதவை திறந்து விட்டனர். 

நகைகள், பணம் கொள்ளை 

இதையடுத்து அவர்கள், மற்றொரு வீட்டிற்கு சென்று பார்த்த போது அந்த வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் நகைகள், பணம் வைத்திருந்த இரும்பு பெட்டியை மட்டும் காணவில்லை. 

வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலையில் உள்ள ஒரு வயலில் துணிமணிகள் சிதறிக்கிடந்தன. உடனே சுந்தரம், செல்வகுமரன் ஓடி சென்று பார்த்தனர். அங்கு இரும்பு பெட்டி உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 20 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. 

தடயங்கள் சேகரிப்பு 

நள்ளிரவில் மர்மநபர்கள் மதில் சுவர் ஏறி குதித்து, 2 பேரது வீட்டின் முன்பக்க கதவை பூட்டியுள்ளனர். பின்னர் மற்றொரு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து இரும்பு பெட்டியை தூக்கிக்கொண்டு, வயல்வெளிக்கு சென்றுள்ளனர். 


அங்கு அதனை உடைத்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்க பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. 
இது பற்றி தகவல் அறிந்ததும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

 கொள்ளை நடந்த வீட்டில் மோப்பமிட்ட நாய், அங்கிருந்து இரும்பு பெட்டி கிடந்த விவசாய வயல் வரை ஓடிச்சென்று நின்றது. மேலும் தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்து தடயங்களை சேகரித்தனர். 
இதுகுறித்து சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story