அரசு திட்டத்தின் கீழ் கட்டித்தரப்படும் வீடுகளுக்கு, நிதி வழங்காமல் பயனாளிகள் அலைக்கழிப்பு மயிலாடுதுறை ஒன்றியக்குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு
அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டித்தரப்படும் வீடுகளுக்கு, நிதி வழங்காமல் பயனாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக மயிலாடுதுறை ஒன்றியக்குழு கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
மயிலாடுதுறை:-
அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டித்தரப்படும் வீடுகளுக்கு, நிதி வழங்காமல் பயனாளிகள் அலைக்கழிக்கப்படுவதாக மயிலாடுதுறை ஒன்றியக்குழு கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
ஒன்றியக்குழு கூட்டம்
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவி காமாட்சி மூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர் அன்பரசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய மேலாளர் பன்னீர்செல்வம் தீர்மானங்களை படித்தார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-
வடவீரபாண்டியன் (காங்.):-
ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு என்று தனியாக ஓய்வு அறை இல்லாதது ஏன்? நகராட்சி எல்லைக்குள் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் வணிக வளாகம் கட்டுவதால் எந்த பயனும் இல்லை. இதனை நான் எதிர்க்கிறேன்.
முருகமணி (தி.மு.க.):- கடந்த ஆட்சியில் அப்போதைய சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தருமதானபுரம் ஊராட்சி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டது. அதே சுற்றுச்சுவர் ஊரக வேலை உறுதி திட்டத்தில் கட்டப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த உண்மையை தெரிவிக்க வேண்டும்.
பயனாளிகள் அலைக்கழிப்பு
ஒன்றிய ஆணையர்:- தருமதானபுரம் ஊராட்சி கீழஆத்துக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் தொடர்பாக பணி மேற்பார்வையாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. இதில் தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும்.
மோகன் (தி.மு.க.):- அரசு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டித் தரப்படும் வீடுகளுக்கு முறையாக நிதி வழங்கப்படவில்லை. இதனால் பயனாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
சிவகுமார் (தி.மு.க.):- மாப்படுகை ஊராட்சியில் குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி அருகே பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. இந்த தொட்டி எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. அதனை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை
அர்ஜுன் (தி.மு.க.):- எனது பகுதிக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. செருதியூர் ஊராட்சியில் அரசின் வீடு கட்டும் திட்டத்திற்கு பயனாளிகளிடம் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சக்திவேல் (பா.ம.க.):- ஊராட்சி ஒன்றியத்திற்கு அதிக அளவில் நிதி பெற்று கிராமங்களில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள இங்கு பெரும்பான்மையாக உள்ள ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. முடிவில் ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story