வனக்காவலரை தாக்கியவர்கள் மீது வழக்கு


வனக்காவலரை தாக்கியவர்கள் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 March 2022 10:35 PM IST (Updated: 5 March 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

வருசநாடு அருகே வனக்காவலரை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடமலைக்குண்டு:
வருசநாடு அருகே கோரையூத்து, காமன்கல்லூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் கடந்த 27-ந்தேதி அரசு பஸ் மூலம் அரசரடிக்கு சென்றனர். அப்போது மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சனூத்து சோதனை சாவடியில் பணியில் இருந்த வனக்காவலர் செல்லத்துரை பஸ்சை நிறுத்தி சோதனை செய்தார். மேலும் வனத்துறை அதிகாரிகள் அனுமதியில்லாமல் வனப்பகுதிக்குள் வேலைக்கு செல்லக்கூடாது என தெரிவித்தார். இதனால் கூலித்தொழிலாளர்களுக்கும் செல்லத்துரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த கோரையூத்து கிராமத்தை சேர்ந்த பரமன் (வயது 50) மற்றும் சிலர் சேர்ந்து செல்லத்துரையை கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த செல்லத்துரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே போல வனக்காவலர் செல்லத்துரை தாக்கியதாக கோரையூத்து கிராமத்தை சேர்ந்த ஒச்சம்மாள் (45) உள்ளிட்ட 3 பெண்கள் தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
இந்த நிலையில் நேற்று உதவி வனப்பாதுகாவலர் ரவிக்குமார், வனச்சரகர்கள் சதீஷ்கண்ணன், ஆறுமுகம் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற மஞ்சனூத்து சோதனை சாவடியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆண்டிப்பட்டி  போலீஸ் துணை சூப்பிரண்டு தங்ககிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சிகளின் அடிப்படையில் செல்லத்துரையை தாக்கிய பரமன் உள்ளிட்ட சிலர் மீது மயிலாடும்பாறை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். இதேபோல ஒச்சம்மாள் அளித்த புகாரின் பேரில் வனக்காவலர் செல்லத்துரை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Next Story