சத்துவாச்சாரியில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட முயற்சி
சத்துவாச்சாரியில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து கடை மூடப்பட்டது.
வேலூர்
சத்துவாச்சாரியில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து கடை மூடப்பட்டது.
டாஸ்மாக் கடை
வேலூர் சத்துவாச்சாரி மந்தைவெளி பகுதியில் பாலாற்றுக்கு செல்லும் வழியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கடையின் அருகே ஏராளமான வீடுகள் மற்றும் பள்ளியும் உள்ளது. அங்கு மதுகுடிக்க வருபவர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அந்த கடையை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நேற்று கடையை முற்றுகையிட சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தற்காலிகமாக மூடல்
அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த டாஸ்மாக் கடை பொதுமக்களுக்கும், பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகளுக்கும் இடையூறாக உள்ளது. பலர் குடித்து விட்டு கலாட்டாவில் ஈடுபடும் நிலை உள்ளது. மேலும், ஆற்றை கடந்து தான் பலர் வேலைக்கு செல்கின்றனர். அவர்கள் செல்லும் வழியில் கடை அமைந்துள்ளதால் மிகவும் சிரமமாக உள்ளது. கடை வரப்போகிறது என்று தகவல் வந்ததில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
--
Related Tags :
Next Story