மத்தூர் அருகே 2 குழந்தைகளை கொன்று, தாய் தற்கொலை


மத்தூர் அருகே 2 குழந்தைகளை கொன்று, தாய் தற்கொலை
x
தினத்தந்தி 5 March 2022 11:06 PM IST (Updated: 5 March 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே 2 குழந்தைகளை கொன்று தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மத்தூர்:
இது பற்றிய விவரம் வருமாறு:-
தொப்பி வியாபாரியின் மனைவி 
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 39). இவருக்கு, கடந்த 9 ஆண்டுகளுக்கு அதேபகுதியை சேர்ந்த காயத்திரி (32) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு கனிஷ்கா (7) என்ற மகளும், சர்வன் (4) என்ற மகனும் இருந்தனர்.
கனிஷ்கா தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். வெங்கடேசன் திருப்பதியில் தொப்பி வியாபாரம் செய்து வருகிறார். பெரும்பாலான நாட்கள் அங்கேயே இருப்பார். அவ்வப்போது தனது ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
சந்தேகம்
வெங்கடேசனின் தாய் உதயலட்சுமி (75) மருமகள் காயத்திரியுடன் இருந்து வந்தார். இந்தநிலையில் நேற்று மாலை 3.30 மணிக்கு காயத்திரி சாப்பிட்டு விட்டு, குழந்தைகளுடன் மாடி அறையில் தூங்க செல்வதாக கூறி சென்றார். சிறிது நேரம் கழித்து காயத்திரி மட்டும் கீழே வந்தார். பின்னர் அவர் நாற்காலி ஒன்றை எடுத்தபடி மேலே மாடி அறைக்கு சென்றார். இதை கவனித்த மாமியார் உதயலட்சுமி எதற்காக நாற்காலியை எடுத்து செல்கிறாய் என கேட்டார். அதற்கு காயத்திரி கயிறு கட்ட வேண்டி உள்ளது என கூறினார். இந்தநிலையில் மாடிக்கு சென்ற காயத்திரி மற்றும் குழந்தைகள் நீண்ட நேரமாகியும் கீழே வராததால் உதயலட்சுமி சந்தேகம் அடைந்தார்.
குழந்தைகள் கொலை 
அவர் மேலே சென்று பார்த்த போது மாடியில் விட்டத்தில் குழந்தைகள் 2 பேருடன் காயத்திரி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர், மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர் மற்றும் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்ட காயத்திரி மற்றும் குழந்தைகள் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப பிரச்சினை?
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினையில் காயத்திரி தனது குழந்தைகள் 2 பேரையும் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்து, பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்தூர் அருகே குடும்ப தகராறில், 2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story