கெலமங்கலத்துக்கு உக்ரைனிலிருந்து திரும்பிய அண்ணன்-தங்கை; பதுங்கு குழிகளில் தவிப்பவர்களை மீட்க கோரிக்கை
உக்ரைனில் இருந்து கெலமங்கலத்துக்கு அண்ணன்-தங்கை பத்திரமாக திரும்பினர். அவர்கள் பதுங்கு குழிகளில் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ராயக்கோட்டை:
அண்ணன்-தங்கை
ஓசூர் அருகே உள்ள கெலமங்கலத்தை சேர்ந்தவர் சான்பாஷா. இவருடைய மகன் வாஜித் அகமத் (வயது 21). மகள் ஹாஜிரா தபசு (18). இவர்கள் 2 பேரும் உக்ரைன் நாட்டில் உஸ்குரோத்தில் உள்ள உஸ்குரோத் தேசிய பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வருகின்றனர். தற்போது உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வருகிறது.
இதனால் அண்ணன் வாஜித் அகமத், தங்கை ஹாஜிரா தபசு ஆகியோர் உக்ரைனில் இருந்து ஹங்கேரி நாட்டு எல்லைக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன், விமானம் மூலம் சொந்த ஊரான கெலமங்கலத்துக்கு திரும்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
பதுங்கு குழிகளில் தவிப்பு
நாங்கள் உக்ரைனின் மேற்கு பகுதியில் படித்து வருகிறோம். கிழக்கு பகுதியில் தான் போர் நடந்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் மற்றும் இந்தியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கார்கிவ், சுமி, கிவ் ஆகிய பகுதிகளில் இந்திய மாணவர்கள் பதுங்கு குழிகளில் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை எப்படியாவது, சீக்கிரமாக மீட்க வேண்டும்.
இந்திய தூதரக அதிகாரிகள் உக்ரைனில் இருந்து வெளியேற எங்களுக்கு உதவிகள் செய்தனர். தமிழக அரசு அதிகாரிகளும் எங்களை தொடர்பு கொண்டு பேசி, உதவிகள் செய்தனர். அதிகாரிகளின் உதவியால் தான் நாங்கள் சொந்த ஊருக்கு வந்தோம். வருகிற 15-ந் தேதியில் இருந்து எங்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story