தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்
திருச்சி மாநகர் சாலைகளில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களில் மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் நிற்போரிடம் திட்டமிட்டு கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும் கும்பல் நகர் எங்கும் பெருகியுள்ளனர். குழந்தைகளை சிறுவயது முதலே பிச்சை எடுக்க வைத்து பழகுகின்றனர். இவர்கள் இப்படி பிச்சை எடுப்பதை தடுத்து, அந்த நபர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஆபேல் குணசீலன், திருச்சி.
குரங்குகளால் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றியம் அரிமளம் சிவன் கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளில் புகுந்து வீட்டில் வைத்திருக்கக்கூடிய திண்பண்டங்கள், மளிகை பொருட்களை எடுத்துச்சென்று விடுகின்றன. அதுமட்டும் இன்றி வீடுகளில் வைத்திருக்கும் பொருட்களை ஆங்காங்கே சிதறவிட்டுவிட்டு சென்றுவிடுகிறது. மேலும் குழந்தைகளை கடிக்க வருவது போல் பயமுறுத்துகின்றன. எனவே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள குரங்குகளை பிடித்து சென்று வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், அரிமளம், புதுக்கோட்டை.
நடைபாதையில் உணவருந்தும் மாணவர்கள்
கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகள் இடப்பற்றாக்குறையால் வகுப்புக்கு செல்லும் நடைபாதையில் இடநெருக்கடியில் அமர்ந்து உணவருந்தி சிரமப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உணவருந்த சரியான இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தோட்டக்குறிச்சி, கரூர்.
ரெயில்வே மேம்பாலம் இல்லாததால் அவதி
கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்திலிருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள புகழூர் வழியாக ரெயில்வே பாதை செல்கிறது. இந்த ரெயில் பாதை வழியாக ஏராளமான ரெயில்கள் அடிக்கடி சென்று வருகின்றன. இதனால் அவ்வப்போது ரெயில்வே கேட் பூட்டப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைத்து அனைத்து வாகனங்களும் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புகழூர், கரூர்.
குடிநீர் தட்டுப்பாடு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் ஆவூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் சமைப்பதற்கும், அன்றாட தேவைக்கும் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இன்னாசிமுத்து, ஆவூர், புதுக்கோட்டை.
போக்குவரத்துக்கு இடையூறு
பெரம்பலூரில் முக்கிய பகுதிகளான புதிய, பழைய பஸ் நிலையங்கள், பாலக்கரை, ரோவர் வளைவு, சங்குபேட்டை, காமராஜர் வளைவு, நான்கு ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி, பெரம்பலூர்.
Related Tags :
Next Story