அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசிப்பெருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து 2-ந்தேதி மயானக்கொள்ளை நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சிகளில் ஒன்றான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால் பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.
நேர்த்திக்கடன்
இதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு உற்சவ அம்மனை அக்னி குளத்திற்கு பல்லக்கில் எடுத்துச் சென்றனர். பின்னர் அம்மனுக்கு கையில் கத்தி, சூலம், கபாலம், உடுக்கை, தீச்சட்டி, வேப்பிலை வைத்தபடி அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து மாலை 3.30 மணிக்கு சிம்மவாகனத்தில் எழுந்தருளிய அம்மன் பம்பை, மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டம் முன்பு எழுந்தருளினார்.
அப்போது பூசாரிகள் அம்மனுக்கும், அக்னிகுண்டத்திற்கும் தீபாராதனை காட்டினர். தொடர்ந்து தலைமை பூசாரி, அக்னிகுண்டத்திற்குள் பூ உருண்டையை உருட்டிவிட்டு அதில் இறங்கினார். அவரை தொடர்ந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக அக்னிகுண்டத்தில் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தேரோட்டம்
மேலும் பக்தர்கள் பலர் முதுகில் அலகு குத்தி லாரி மற்றும் வேன் ஆகியவற்றை இழுத்தும், பறக்கும் காவடி எடுத்தும் அம்மனுக்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் ராமு, அறங்காவலர் குழுத்தலைவர் வடிவேல் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை செஞ்சி துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரியதர்ஷினி தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மேலும் தீ விபத்து நடைபெறாமல் தடுக்கும் வகையில் மேல்மலையனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சாமளவண்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story