அக்னி சட்டி, கரும்பு தொட்டில் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்


அக்னி சட்டி, கரும்பு தொட்டில் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 6 March 2022 12:04 AM IST (Updated: 6 March 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் புதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அக்னி சட்டி, கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

திருப்புவனம்,

திருப்புவனம் புதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் அக்னி சட்டி, கரும்பு தொட்டில் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

மாரியம்மன் கோவில்

திருப்புவனம் புதூரில் மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையோரம் பிரசித்தி பெற்ற மாரியம்மன் மற்றும் ரேணுகாதேவி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 இதைத் தொடர்ந்து அம்பாள் மற்றும் உற்சவருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பின்னர் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். 

கரும்பு தொட்டில் எடுத்தல்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அக்னி சட்டி எடுத்தல் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை நடைபெற்றது. மேலும் கரும்பு தொட்டில் கட்டுதல், மாவிளக்கு எடுத்தல், உருவபொம்மை எடுத்து வைத்தல், ஆயிரங்கண் பானை எடுத்தல், கை பாதம், கால் பாதம் எடுத்தல், கரும்புள்ளி செம்புள்ளி குத்துதல், போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினார்கள். நிறைய பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். முன்னதாக அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த மாசி திருவிழாவில் திருப்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் இறக்கி வைத்த பொம்மைகள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில், மானாமதுரை துணை சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையில் உட்கோட்ட போலீசார் செய்திருந்தனர்.

Next Story