திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்கிறது
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
புதுக்கோட்டை:
மாசித்திருவிழா
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவு 8 மணிக்கு அம்மன் வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பவனி வருகிறார். தினமும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் பலர் விரதம் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது. காட்டுமாரியம்மன் கோவில் முன்பு இருந்து தேர் புறப்பட்டு உலா வந்து நிலையை வந்தடையும். தேரோட்டத்தையொட்டி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள்
இந்த நிலையில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பலர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பால்குடம் எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும், கரும்பில் தொட்டில் கட்டி வந்தும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். தீச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வருகை தருவது உண்டு. இதனால் திருவப்பூர் பகுதியே விழாக்கோலமாகிவிடும். பக்தர்கள் பலர் பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்துவர்கள்.
பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் வரிசையாக செல்ல வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. புறக்காவல் நிலையமும் திறக்கப்பட்டுள்ளது. அதில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை போலீசார் பார்வையிடுகின்றனர்.
பலத்த பாதுகாப்பு
கோவிலுக்கு நாளையும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது உண்டு. இதையொட்டி பொழுதுபோக்கிற்காக ராட்டினம் உள்பட விளையாட்டு உபகரணங்களும் பல இடம் பெற்றுள்ளன. மேலும் சாலையோரத்தில் ஏராளமான கடைகள் போடப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலில் மாசித்திருவிழா வருகிற 15-ந் தேதி நிறைவடைகிறது. திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story