போலி தங்கக்கட்டி கொடுத்து ரூ.1½ லட்சம் அபேஸ்
துணிக்கடை பெண் உரிமையாளரிடம் போலிதங்கக்கட்டி கொடுத்து ரூ.1½ லட்சத்தை அபேஸ் செய்த ஆந்திராவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள ஒருகோடி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ் மனைவி கவிதா (வயது 30). இவர் நன்னாட்டில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவை சேர்ந்த 2 பேர் ஜோதிடம் பார்ப்பதாக கூறி வந்துள்ளனர்.
அந்த பழக்கத்தின் அடிப்படையில் கடந்த மாதம் 4-ந் தேதியன்று விழுப்புரத்திற்கு மீண்டும் வந்த அவர்கள் 2 பேரும், கவிதாவின் கடைக்கு சென்று அங்கிருந்த அவரிடம், தாங்கள் சொந்த வேலை விஷயமாக வந்துள்ளதாகவும், எங்களிடம் ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிராம் எடையுள்ள ஒரு தங்கக்கட்டி இருப்பதாகவும், அதனை பெற்றுக்கொண்டு பணம் தரும்படியும் கேட்டுள்ளனர்.
ரூ.1½ லட்சம் அபேஸ்
அதற்கு கவிதா, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். அப்படியானால் உங்களிடம் இருக்கும் பணத்தை தற்சமயத்திற்கு தரும்படியும், மீதியுள்ள பணத்தை பின்னர் வந்து பெற்றுக்கொள்வதாகவும் அவர்கள் இருவரும் கூறியுள்ளனர். உடனே கவிதா, தன்னிடம் இருந்த ரூ.1½ லட்சத்தை கொடுத்து அந்த தங்கக்கட்டியை பெற்றுள்ளார். அதன் பிறகுதான் அது தங்கக்கட்டி இல்லை என்பதும், தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை பொருள் என்பதை தெரிந்து கவிதா அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து கவிதா, அந்த 2 பேரையும் பல்வேறு இடங்களில் தேடினார். இந்த சூழலில் தற்செயலாக விழுப்புரம் அருகே எனதிரிமங்கலம் என்ற இடத்தில் அவர்கள் இருவரையும் பார்த்தார். உடனே அவர்கள் இருவரையும் அக்கம், பக்கத்தில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப்பிடித்து விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஆந்திராவை சேர்ந்த 2 பேர் கைது
அதனை தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருவரும் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் கோகுல்பாடு சத்திரம்பிள்ளை என்ற பகுதியை சேர்ந்த சுப்பாராவ் மகன் துர்காராவ் (50), கொண்டலு மகன் அங்கமாராவ் (30) என்பது தெரிந்தது.
மேலும் விசாரணையில், இவர்கள் இருவரும் சம்பவத்தன்று கவிதாவின் கடைக்கு சென்று அங்கிருந்த அவரிடம் ஒரு ஒரிஜினல் தங்கக்கட்டியை காண்பித்து அதை அவரது கண் முன்னே உரைகல்லில் உரசி உண்மையான தங்கக்கட்டி என்பதை உறுதி செய்துகொண்டு கவிதாவின் கவனத்தை திசைதிருப்பி விட்டு அந்த ஒரிஜினல் தங்கக்கட்டியை அவர்கள் இருவரும் வைத்துக்கொண்டு அதற்கு பதிலாக போலியான கட்டியான தங்க முலாம் பூசப்பட்ட கட்டியை கொடுத்துவிட்டு பணத்தை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து துர்காராவ், அங்கமாராவ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் இருவரும் இதுபோன்று வேறு ஏதேனும் நம்பிக்கை மோசடி வழக்குகளில் தொடர்பு உடையவர்களா? என்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story