விருதுநகர் மாவட்ட எல்லையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று சிறப்பான வரவேற்பு
பந்தல்குடியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவை இன்று திறந்து வைக்க வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விருதுநகர் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
விருதுநகர்,
பந்தல்குடியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவை இன்று திறந்து வைக்க வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விருதுநகர் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
முதல்-அமைச்சர் வருகை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் மாலை 5 மணி அளவில் மதுரை வருகிறார். மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக காரில் 5.45 மணியளவில் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடிக்கு வருகைதரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பகுதியில் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தால் 72 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை (எக்கோபார்க்) திறந்து வைக்கிறார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை-தூத்துக்குடி சாலையில் விருதுநகர் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
சிறப்பான வரவேற்பு
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலெக்டர் மேகநாதரெட்டி வரவேற்கிறார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
மதுரையிலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வரும் வரையில் மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டிருந்து அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின் அவர் முதன் முதலில் விருதுநகர் மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பாதுகாப்பு ஏற்பாடு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தென் மண்டல ஐ.ஜி. அன்பு தலைமையிலும், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி மேற்பார்வையிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் கண்காணிப்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயிரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், தங்கப்பாண்டியன், ரகுராமன், அசோகன் உள்ளிட்டோரும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும், ஊரக உள்ளாட்சி நிர்வாகிகளும், கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.
பந்தல்குடியில் சுற்றுச்சூழல் பூங்கா திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக காரில் தூத்துக்குடிக்கு செல்கிறார்.
Related Tags :
Next Story