மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு விரைவில் வகுப்புகள்
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளன. வகுப்பறை, ஆய்வகத்தை 2-வது முறையாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளன. வகுப்பறை, ஆய்வகத்தை 2-வது முறையாக அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
அரசு மருத்துவக்கல்லூரி
ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. 100 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டு கடந்த ஜனவரி 13-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில் முதல்கட்டமாக தற்போது வரை மாநில ஒதுக்கீட்டில் 85 இடங்களும் பூர்த்தியாகி மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அகில இந்திய ஒதுக்கீட்டில் 15 இடங்களில் இதுவரை 9 பேர் சேர்ந்துள்ளனர். முதலாம் ஆண்டுக்கான பாட வகுப்புகள் அந்தந்த பேராசிரியர்கள் மூலம் தொடங்கி நடந்து வருகிறது. புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடம் என்பதால் திட்டமிட்டு தேவையான அளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு விசாலமான அறைகள், பாதுகாப்பு பெட்டக வசதிகள், வகுப்பறைகள் என அனைத்து அம்சங்களும் நிறைவாக அமைந்துள்ளன.
எய்ம்ஸ் கல்லூரி
மருத்துவ உயர்கல்வி இடங்களில் 40 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இதுவரை 10 பேர் சேர்ந்துள்ளனர். மீதம் உள்ளவர்கள் விரைவில் சேர உள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 50 இடங்களுக்கான வசதிகள் அனைத்தும், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டும் வரை 2 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளில் 50 பேருக்கு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் வைத்து பாடங்கள், செயல்முறை வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
2-வது முறையாக ஆய்வு
இதற்கேற்ப நேற்று முன்தினம் எய்ம்ஸ் அதிகாரிகள் குழுவினர் 2-வது முறையாக நேரில் வந்து ஆய்வு செய்து சென்றுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான ஒதுக்கப்பட்டுள்ள 5-வது தளத்தை முழுமையாக பார்வையிட்டதோடு கல்லூரி வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள், அலுவலக கட்டிடங்கள் என ஒவ்வொரு பகுதியாக நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ராமநாதபுரத்தில் வகுப்புகள் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த வகுப்புகள் 2 ஆண்டு காலத்திற்கு ராமநாதபுரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தனியாக கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டதும், அல்லது தற்காலிக கட்டிடம் தயார் செய்யப்பட்டதும் இவர்கள் அங்கு சென்றுவிடுவார்கள் என்பதால் அதுவரை இங்கு வகுப்புகள் நடத்தப்படும்.
இந்த தகவலை மருத்துவ கல்லூரி அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story