புகார் பெட்டி
புகார் பெட்டி
நடவடிக்கை எடுக்கப்பட்டது
நாகர்கோவில் வடசேரியில் அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் எந்த நேரமும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த பகுதியை பொதுமக்கள் கடந்து செல்லவும், வாகன போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் போதிய வசதிகள் செய்யப்படாமல் இருந்தது. இதனால், சாலையை கடக்க முயலும் பாதசாரிகள் மிகவும் அவதிபட்டு வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையின் நடுவே பெரிய காங்கிரீட் தடுப்புகள் வைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியுள்ளனர். செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தடுப்பு வேலிகள் வைக்க வேண்டும்
வெட்டூர்ணிமடம் சந்திப்பு பகுதியில் தனியார் பள்ளிகள், வழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் போன்றவை உள்ளன. மேலும், இந்த பகுதியில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இதனால், சாலையை கடந்து செல்ல பாதசாரிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும், பாதசாரிகள் சாலையை கடந்து செல்ல வசதியாகவும், சாலையின் நடுவே தடுப்பு வேலிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-எம்.ஜி. சிவராஜ் கிருஷ்ணன், வடசேரி.
தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்
கொல்லங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு கிராத்தூர் பகுதியில் இதுவரை தெருவிளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பும் தொழிலாளர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, தெருவிளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கி.சந்தோஷ்குமார், கிராத்தூர்.
வடிகால் ஓடை தேவை
ஆசாரிபள்ளத்தில் இருந்து பாம்பன்விளை செல்லும் சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக நடந்து செல்கிறவர்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும், கொசு உற்பத்தி அதிகமாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அந்த பகுதியில் போதிய வடிகால் ஓடை அமைத்து தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆ.ஆன்டனி சதீஷ், ஆசாரிபள்ளம்.
மனநோயாளியால் தொல்லை
நாகர்கோவில், வடசேரி பஸ் நிலையத்தில் கடந்த சில நாட்களாக ஒரு மனநோயாளி சுற்றி வருகிறார். அவர் அடிக்கடி சத்தம் போட்டு அழுவதும், கீழே படுத்து உருண்டு அருவருக்கத்தக்க ெசயல்களில் ஈடுபடுவதுமாக உள்ளார். இதனால், பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும், அவர்கள் மனநோயாளியை கண்டு பயந்து ஒதுங்கி ஓடி ஒளியும் நிலை ஏற்படுகிறது. எனவே, மனநோயாளியை மீட்டு காப்பகத்தில் சேர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.ஜோணி, ஆரல்வாய்மொழி.
வேகத்தடை உயரம் குறைக்கப்படுமா?
கிருஷ்ணன்கோவில் வெள்ளாளர் மேலத்தெருவில் ஒரு வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை சாதாரண அளவில் இருந்து அதிக உயரத்தில் உள்ளது. இதனால், அதன்மீது வாகனங்கள் ஏறி, இறங்கும் போது அவற்றின் என்ஜின் வேகத்தடையின் மீது உரசுகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் வேகத்தடையை கடந்து செல்ல மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே, வேகத்தடையின் உயரத்தை குறைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-விஜயகுமார், வாத்தியார்விளை.
சாலை சீரமைக்கப்படுமா?
அழகியபாண்டியபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கேசவன்புதூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் பாலமோர் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஹரி, கடுக்கரை.
Related Tags :
Next Story