சீறிப்பாய்ந்த காளைகளை உற்சாகமாக அடக்கிய வீரர்கள்


சீறிப்பாய்ந்த காளைகளை உற்சாகமாக அடக்கிய வீரர்கள்
x
தினத்தந்தி 6 March 2022 1:49 AM IST (Updated: 6 March 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை உற்சாகமாக வீரர்கள் அடக்கினர்.

கீழப்பழுவூர்:

ஜல்லிக்கட்டு
அரியலூர் மாவட்டம் திருமானூரில் மாசி மகத்தை முன்னிட்டு ஊரின் நடுத்தெருவில் வாடிவாசல் அமைக்கப்பட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு நடக்கும் முதல் ஜல்லிக்கட்டு இதுவாகும். அரசு அனுமதியுடன் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி, சின்னப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று காலை 9.30 மணி அளவில் தொடங்கி வைத்து, உறுதிமொழி ஏற்றனர். வீரர்கள் களத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து முதலில் கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது.
இதைத்தொடர்ந்து அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்க முயன்றனர். இதில் பல காளைகள் மாடுபிடி வீரர்களால் அடக்கப்பட்டன. சில காளைகள் வீரர்களை அருகில் கூட நெருங்க விடாமல் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தன.
பரிசுகள்
இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா, பீரோ, ரொக்கம் உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது. சில காளைகளின் உரிமையாளர்கள், தங்கள் காளையை அடக்கினால் ரொக்கப்பரிசு வழங்குவதாக அறிவித்திருந்தனர். அவ்வாறு அறிவிக்கப்பட்ட காளைகளை பிடித்தவர்களுக்கு விழாக்குழுவினரிடம் இருந்து கொடுக்கப்பட்ட பரிசு மட்டுமின்றி, காளையின் உரிமையாளர் அறிவித்த பரிசும் வழங்கப்பட்டது.
முன்னதாக மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, தகுதி உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் மட்டுமே களத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டில் மொத்தம் 430 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 221 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் உள்பட மொத்தம் 33 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மருத்துவமனைகளில் சிகிச்சை
இதில் வாரணவாசி கிராமத்தை சேர்ந்த நல்லப்பன்(வயது 75), தஞ்சை மாவட்டம் கோவிலடி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகனின் மகன் பிரபு (27), பள்ளி அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மகன் பிரியன் (22), அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த அந்தோணிசாமியின் மகன் ஜெனித் (25), திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் பாரதி (29) உள்ளிட்ட 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், அவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மற்றும் அரியலூர் அரசு மருத்துவமனைகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காலை 9.30 மணி அளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 2.30 மணி அளவில் அனைத்து மாடுகளும் அவிழ்த்து விடப்பட்டு நிறைவுபெற்றது. ஜல்லிக்கட்டையொட்டி 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story