கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு
கோவில் பூட்டை உடைத்து உண்டியலை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
தா.பழூர்:
பழமையான கோவில்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் கிராமத்தில் சாலை ஓரத்தில் மிகவும் பழமையான கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலையொட்டி கும்பகோணம் - திண்டிவனம் செல்லும் முக்கிய சாலை உள்ளது. எனவே இந்த சாலையில் 24 மணி நேரமும் தொடர்ந்து சிறிய ரக வாகனம் முதல் கனரக வாகனம் வரை போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். அதுமட்டுமின்றி கோவில் இருக்கும் இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் அரியலூர்-தஞ்சை மாவட்டங்களை பிரிக்கும் எல்லைப் பகுதியில் மதனத்தூர் சோதனைச்சாவடி அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழிபாடு முடிந்தபின்னர் கோவில் நடை பூட்டப்பட்டது. நேற்று காலை மீண்டும் கோவிலை திறக்க கோவில் நிர்வாகத்தினர் சென்றுள்ளனர். அப்போது, கோவில் கதவில் பூட்டு மற்றும் சங்கிலி இல்லாமல் சாதாரணமாக கதவு மூடி வைக்கப்பட்டிருந்தது.
உண்டியல் திருட்டு
மேலும் கோவில் கதவில் உள்புறமாக இரும்பு கம்பிகளால் பற்றவைக்கப்பட்டு இருந்த உண்டியலையும் காணாததால் அதிர்ச்சி அடைந்த கோவில் நிர்வாகத்தினர், இது குறித்து உடனடியாக தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டபோது, கோவிலின் அருகில் உள்ள குதிரை சிலையின் பக்கத்தில் சங்கிலி மற்றும் பூட்டு கிடந்தது. அவற்றை கோவில் கதவில் இருந்து ஆக்ஸா பிளேடு கொண்டு அறுத்து அப்புறப்படுத்தப்பட்டது தெரிவந்தது.
இதேபோல் கோவிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் வயல்வெளியில் உள்ள வாய்க்காலில் சில்வர் குடம் ஒன்று மிதந்ததை அப்பகுதி விவசாயிகள் பார்த்தனர். அருகில் சென்று பார்த்தபோது அது கருப்புசாமி கோவிலில் காணாமல் போன உண்டியல் என்பதும், அதில் இருந்த பணத்தை எடுத்துவிட்டு அதனை மர்ம நபர்கள் வாய்க்காலில் வீசி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து உண்டியலை மீட்ட விவசாயிகள், அதனை மதனத்தூர் சோதனைச்சாவடியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை
சாலையோரத்தில் உள்ள கோவில் என்பதால் அந்த வழியாக பயணம் செய்யும் பக்தர்கள், கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து, உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே உண்டியலில் சுமார் ரூ.10 ஆயிரம் இருந்திருக்கும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story