இருளில் தவித்த கிராம மக்களுக்கு வெளிச்சத்தை கொடுத்த கலெக்டர்
‘செந்தமிழ் நகர்’ திட்டத்தின் கீழ் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு 30 ஆண்டுகளாக இருளில் தவித்த கிராம மக்களுக்கு வெளிச்சம் கிடைத்துள்ளது.
தஞ்சாவூர்;
‘செந்தமிழ் நகர்’ திட்டத்தின் கீழ் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு 30 ஆண்டுகளாக இருளில் தவித்த கிராம மக்களுக்கு வெளிச்சம் கிடைத்துள்ளது. அடுத்த கட்டமாக கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மேற்கொண்டு வருகிறார்.
கலெக்டரின் சிறப்பு திட்டம்
புறம்போக்கு நிலத்தில் குடிசைகள் அமைத்து எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி தங்களது வாழ்நாளை கழித்துக்கொண்டு இருக்கும் விளிம்புநிலை மக்களை கண்டறிந்து அவர்களுக்கு அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கான்கிரீட் வீடுகளும் கட்டி கொடுக்க தஞ்சை மாவட்டத்தில் ‘செந்தமிழ் நகர்’ என்ற பெயருடன் ஒரு சிறப்பு திட்டத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செயல்படுத்தி வருகிறார்.
இந்த சிறப்பு திட்டத்தின் கீழ் 30 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருளில் தவித்த மக்களுக்கு தற்போது வெளிச்சம் கிடைக்க துரித நடவடிக்கையை கலெக்டர் மேற்கொண்டதால் மிகுந்த உற்சாகத்தில் அந்த கிராம மக்கள் உள்ளனர்.
அது பற்றிய விவரம் வருமாறு
ஏங்கி தவித்த மக்கள்
தஞ்சையை அடுத்த ஆலக்குடி அருகே உள்ள காமாட்சிபுரத்தில் 27 குடும்பத்தினர் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் சாதாரண மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இன்றி வசித்து வந்தனர். இரவு நேரங்களில் மண்எண்ணெய் விளக்குகளே இவர்களுக்கு ஒளியை தந்து வந்தது. மழைக்காலங்களில் குடிசை வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடக்கூடிய நிலையில் தான் அப்பகுதி மக்கள் வசித்து வந்தனர்.
மற்றவர்களைப்போன்று தங்களுக்கும் அடிப்படை வசதிகள் கிடைக்காதா? என்று இங்கு வசித்து வந்த மக்கள் ஏங்கி தவித்து வந்தனர். இதனால் இலவச பட்டாவுடன் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். ஆனால் அவர்களது கோரிக்கை கேட்பாரற்ற நிலையிலேயே இருந்து வந்தது.
திடீர் ஆய்வு
இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து காமாட்சிபுரம் மக்கள் கோரிக்கை மனு அளித்ததுடன் தாங்கள் வசித்து வரும் நிலைகளை பற்றி எடுத்து கூறிவிட்டு வந்தனர். இந்த மனுவும் ஏற்கனவே அளித்த மனுவை போல் கிணற்றில் போட்ட கல்லைப்போன்று போய்விடுமோ? என அந்த பகுதி மக்கள் எண்ணியிருந்த நேரத்தில் அவர்கள் அதிசயிக்கும்படி அந்த நிகழ்வு நடந்தது.
இந்த காலத்திலும் இப்படி ஒரு நிலையில் மக்கள் வாழ்கிறார்களா? அவர்களது நிலையை உடனடியாக பார்க்க வேண்டும் என்று முடிவு செய்த கலெக்டர் திடீரென காமாட்சிபுரத்திற்கு சென்று அங்கு வாழும் மக்களின் நிலைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனே அவர்களுக்கு பட்டா வழங்குவதுடன் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என அவர் முடிவெடுத்தார்.
இருளில் தவித்த மக்களுக்கு வெளிச்சம்
அதன்படி ‘செந்தமிழ் நகர்’ திட்டத்தின் கீழ் 27 குடும்பத்தினரையும் தேடிச்சென்று பட்டா வழங்கினார். மேலும் குடிநீர் வசதி, சாலைவசதி, மின்இணைப்பு, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அந்த பகுதிக்கு செய்து கொடுக்கப்பட்டது.
மேலும் அந்த பகுதி மக்களுக்கு மின்இணைப்புக்கான டெபாசிட் தொகையை கலெக்டரே தனது சொந்த செலவில் செலுத்தினார். இதன் மூலம் 30 ஆண்டுகளாக இருளில் வசித்த மக்களுக்கு தற்போது வெளிச்சம் கிடைத்துள்ளது.
Related Tags :
Next Story