உக்ரைனில் சிக்கி தவித்த மதுக்கூர் மாணவர்கள் சொந்த ஊர் திரும்பினர்
உக்ரைனில் சிக்கி தவித்த மதுக்கூர் மாணவர்கள் சொந்த ஊர் திரும்பினர். அவர்கள் தங்களின் மருத்துவக்கல்வியை தொடர மத்திய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுக்கூர்;
உக்ரைனில் சிக்கி தவித்த மதுக்கூர் மாணவர்கள் சொந்த ஊர் திரும்பினர். அவர்கள் தங்களின் மருத்துவக்கல்வியை தொடர மத்திய அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
போர்
உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதலால் உக்ரைனின் பல பகுதிகள் தீக்கிரையாகி வருகின்றன. இதனால் உக்ரைனில் வாழும் மக்கள் பல்வேறு இன்னல்களை தினமும் சந்தித்து வருகிறார்கள். உக்ரைனில் மருத்துவ படிப்புக்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அங்கு தங்கியிருந்து தங்கள் கல்வியை தொடர்ந்து வந்தனர். தற்போது உக்ரைன் மீது ரஷியாவின் போர் காரணமாக மாணவர்களை அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து மீட்கப்பட்டு வருகின்றனர். இதன்படி இந்திய மாணவர்கள் தனியார் விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்திய விமானப்படை விமானங்களும் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.
மதுக்கூர் மாணவர்கள்
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியை சேர்ந்த 2 மாணவர்கள் மற்றும் ஒரு மாணவி உள்பட 3 பேர் உக்ரைனில் மருத்துவம் படித்து வந்தனர். உக்ரைனில் நடைபெற்று வரும் போர் காரணமாக கடந்த 10 நாட்களாக இந்த மாணவர்கள் மற்றும் மாணவி அங்கு மிகவும் அவதிப்பட்டு தாயகம் திரும்ப முடியாமல் தவித்தனர். இதனால் இவர்களின் பெற்றோர் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.
மதுக்கூர் வடக்கு ஊராட்சியை சேர்ந்த பவித்ரன், கீழக்குறிச்சியை சேர்ந்த யோக மவுலீஸ்வரன், காசாங்காடு பகுதியை சேர்ந்த ஜெயதர்ஷினி ஆகிய இந்த மாணவர்கள் மற்றும் மாணவியின் நிலை என்ன என்று அறிய முடியாமல் தவித்தநிலையில் நேற்று இந்த மாணவர்கள் மற்றும் மாணவி தாயகம் திரும்பி மதுக்கூருக்கு வந்தனர்.
இதனால் அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
சிக்கி தவிக்கும் அவலம்
இதுகுறித்து மாணவர் பவித்ரன் கூறியதாவது
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் நாங்கள் படித்துவந்த கல்லூரியில் இருந்து நாங்கள் வெளியேறினோம். மிகவும் பதற்றமான சூழ்நிலையில் நாங்கள் கீவ் நகரில் இருந்து ஸ்லோவாக்கியா நாட்டுக்கு வந்தடைந்தோம். அங்கிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து பின்னர் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். டெல்லிக்கு வந்த எங்களை தமிழக அரசு பிரதிநிதிகள் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர் அங்கிருந்து தனி வாகனம் மூலம் நாங்கள் எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். எங்களை போல இன்னும் பல மாணவர்கள் அங்கே போர் சூழலில் சிக்கி தவிக்கின்றனர்.
கல்வியை தொடர நடவடிக்கை
அவர்களையும் விரைவில் மீட்க வேண்டும். நான் இறுதியாண்டு படித்து வருகிறேன். இன்னும் 2 மாதத்தில் எனது படிப்பு முடிவடைய உள்ளது. நான் படிப்பை முடித்து இந்திய நாட்டில் நடத்தப்படும் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் தான் இங்கு நான் மருத்துவம் பார்க்க முடியும் ஆனால் தற்போது போர் நடைபெற்று வருவதால் இந்த வருடம் கடைசித் தேர்வு நடைபெறுமா என்று தெரியவில்லை.
கடந்த 6 வருடங்களாக படித்த படிப்பு நிறைவடையும் நிலையில் போரால் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. என்னை போல உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க சென்ற இந்திய மாணவர்களின் நலன் கருதி மருத்துவ கல்வியை நாங்கள் இந்தியாவில் தொடர மத்திய அரசு நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர் யோக மவுலீஸ்வரன் கூறும்போது நான் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி தான் மருத்துவம் படிக்க உக்ரைன் சென்றேன். கல்லூரியில் சேர்வதற்கு முன்பு போர் தொடங்கிவிட்டதால் நான் எனது சீனியர் மாணவர்களுடன் சேர்ந்து கீவ் நகரிலிருந்து ஸ்லோவாக்கியா நாட்டிற்கு வந்தடைந்து அங்கிருந்து டெல்லி மற்றும் சென்னை வந்தடைந்தேன். மேலும் உக்ரைனில் தவிக்கும் மாணவர்களை விரைவில் மீட்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story