கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு:
சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று முன்தினம் பெங்களூரு சுதந்திர பூங்கா அருகே போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தெரிகிறது.
இதனால் நேற்று 2-வது நாளாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டத்தில் நேற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்தே உணவு சாப்பிட்டனர்.
இந்த போராட்டம் எதிரொலியாக சுதந்திர பூங்கா வழியாக பி.வி.கே.ஐயங்கார் சாலை செல்லும் காளிதாசா சாலையை போலீசார் மூடினர். இதனால் அந்த வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் காளிதாசா சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. வார இறுதி நாளான நேற்றும் போக்குவரத்து நெரிசல் உண்டானதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த போராட்டத்தையொட்டி சுதந்திர பூங்கா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story