விவசாயியை அரிவாளால் வெட்டி மனைவியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
அம்மாப்பேட்டை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் விவசாயியை அரிவாளால் வெட்டி அவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.
அம்மாப்பேட்டை;
அம்மாப்பேட்டை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் விவசாயியை அரிவாளால் வெட்டி அவரது மனைவி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.
விவசாயி
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே உள்ள செண்பகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்(வயது45). விவசாயி. இவரது மனைவி ராஜலட்சுமி. சம்பவத்தன்று இரவு கணவன்- மனைவி இருவரும் தங்கள் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் 2 மர்ம நபர்கள் கண்ணன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்தனர். இதனால் சத்தம் கேட்டு கண்ணன் மற்றும் ராஜலட்சுமி திடுக்கிட்டு எழுந்தனர். அதற்குள் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்களில் ஒருவர் தான் வைத்திருந்த அரிவாளால் கண்ணனை வெட்டினார். பின்னர் அவர்கள் ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்று விட்டனர்.
போலீசார் விசாரணை
ராஜலட்சுமியின் சத்தம் கேட்டு அங்கு திரண்டு வந்த மக்கள் அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
மேலும் சம்பவ இடத்தை தஞ்சை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ரவளிப்பிரியா பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விவசாயியை அரிவாளால் வெட்டி அவரது மனைவியிடம் மர்ம நபர்கள் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் செண்பகபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story