என்ஜினீயர் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு


என்ஜினீயர் கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
x
தினத்தந்தி 6 March 2022 2:38 AM IST (Updated: 6 March 2022 2:38 AM IST)
t-max-icont-min-icon

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய என்ஜினீயர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் கைதான யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கான தண்டனை விவரம் நாளை மறுநாள் (8-ந் தேதி) அறிவிக்கப்படும் எனவும் மதுரை சிறப்பு கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

மதுரை
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய என்ஜினீயர் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் கைதான யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என்றும், அவர்களுக்கான தண்டனை விவரம் நாளை மறுநாள் (8-ந் தேதி) அறிவிக்கப்படும் எனவும் மதுரை சிறப்பு கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.
ஆணவக்கொலை
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ெரயில் தண்டவாளம் பகுதியில் பிணமாக கிடந்தாா். அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைதானார்கள். இதில் ஒருவர் தலைமறைவாக உள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கை விசாரித்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு விஷ்ணு பிரியா தற்கொலை செய்த சம்பவத்துக்கு பின்னர், இந்த வழக்கு மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்தது.
மதுரை கோர்ட்டுக்கு மாற்றம்
இந்தநிலையில் தனது மகன் கொல்லப்பட்ட வழக்கை உள்ளூர் கோர்ட்டில் விசாரித்தால் சாட்சிகள் கலைக்கப்படலாம். வழக்கின் திசை மாற்றப்படலாம் என்றும், எனவே வேறு மாவட்ட கோர்ட்டுக்கு வழக்கை மாற்ற வேண்டும் என கோகுல்ராஜ் தாயார் சித்ரா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் கோகுல்ராஜ் கொலை வழக்கை, மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கு மதுரை சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்டவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து கடந்த மாதம் உத்தரவிடப்பட்டு இருந்தது.
10 பேர் குற்றவாளிகள்
இந்தநிலையில் இந்த வழக்கில் நீதிபதி சம்பத்குமாா் நேற்று தீர்ப்பளித்தார். இதனால் நேற்று காலையில் இருந்து கோர்ட்டு வளாகம் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த யுவராஜ் உள்ளிட்டவர்களை ேபாலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து நேரில் ஆஜர்படுத்தினர்.
இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்டவர்களான தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர்கள் அருண், குமார் மற்றும் சதீஷ் குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அறிவித்தார்.
இந்த வழக்கில் கைதான சங்கர், அருள்செந்தில், செல்வகுமார் தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரை விடுதலை செய்வதாகவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
8-ந் தேதி தண்டனை விவரம்
மேலும் இந்த வழக்கின் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 10 பேருக்கு விதித்துள்ள தண்டனை விவரம் வருகிற 8-ந் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி உள்ளார்.
இந்த 15 பேர் தவிர இந்த வழக்கில் தொடர்புடைய ஜோதிமணி என்ற பெண் ஏற்கனவே இறந்து விட்டார்.
மற்றொருவரான அமுதரசு தலைமறைவாக உள்ளதால் அவர் மீதான வழக்கு நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story