காப்பி அடித்ததால் தேர்வு எழுத தடை: 5-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை


காப்பி அடித்ததால் தேர்வு எழுத தடை: 5-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 6 March 2022 2:43 AM IST (Updated: 6 March 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

காப்பி அடித்ததால் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டதால் தங்கும் விடுதியின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு:

தேர்வு எழுத தடை

  கோலார் மாவட்டம் முல்பாகலை சேர்ந்தவர் பவ்யா(வயது 21). இவர் பெங்களூரு கோரமங்களா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். மேலும் ஜீவன்பீமாநகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லூரியில் நடந்த ஒரு தேர்வின் போது பவ்யா காப்பி அடித்ததாக தெரிகிறது.

  இதனை கல்லூரி ஊழியர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் பவ்யாவிடம் இருந்து தேர்வு தாளை வாங்கி கொண்டு வெளியே அனுப்பியதாக தெரிகிறது. மேலும் பவ்யா இனிமேல் தேர்வு எழுதவும் கல்லூரி நிர்வாகம் தடை விதித்ததாக தெரிகிறது. இதனால் பவ்யா மனம் உடைந்தார்.

தற்கொலை

  இந்த நிலையில் நேற்று முன்தினம் பவ்யா தனது சகோதரி திவ்யாவை செல்போனில் தொடர்பு கொண்டு ‘தேர்வின் போது காப்பி அடித்ததால் எனக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நான் சாக போகிறேன்’ என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார். இதனை கேட்டு அதிா்ச்சி அடைந்த திவ்யா தனது பெற்றோரிடம் கூறினார்.

  இதனை தொடர்ந்து பவ்யாவின் பெற்றோர் உடனடியாக பெங்களூருவுக்கு புறப்பட்டனர். ஆனால் அதற்குள் தங்கும் விடுதியின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்து பவ்யா தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த ஜீவன்பீமாநகர் போலீசார் அங்கு சென்று பவ்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஜீவன்பீமாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story