எல்.ஐ.சி. பங்குகளை விற்பது தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகம்
எல்.ஐ.சி. பங்குகளை விற்பது தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகம் என தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. பேசினார்.
தஞ்சாவூர்;
எல்.ஐ.சி. பங்குகளை விற்பது தொழிலாளர்களுக்கு செய்யும் துரோகம் என தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி. பேசினார்.
ஆர்ப்பாட்டம்
தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரே காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்யும் மத்தியஅரசின் முடிவை கைவிடக்கோரி நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தஞ்சை கோட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் சேதுராமன் வரவேற்றார். இதில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது
காப்பீட்டுத்துறை மீது மக்கள் நம்பிக்கை இழக்காமல் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் அவசர தேவைக்கு நிதி வழங்கும் அட்சய பாத்திரமாக எல்.ஐ.சி. திகழ்கிறது. பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று 7 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை தலையாய பணியாக மத்தியஅரசு கொண்டுள்ளது.
மிகப்பெரும் தூண்
எல்.ஐ.சி. பற்றிய புரிதல் பாலிசிதாரர்களிடமே அதிகமாக இருக்கிறது. இந்த நாட்டின் கட்டமைப்புக்கு மிகப்பெரும் தூணாக எல்.ஐ.சி. இருக்கிறது. இதேபோல, தனியார் கூரியர் நிறுவனங்களை விட தபால்துறையின் விரைவு அஞ்சல் சேவையை தான் மக்கள் நம்புகின்றனர். இந்தியாவில் பொதுத் துறை நிறுவனங்கள் வெற்றி பெறாது என கூற இயலாது. தனியார் விமான நிறுவனங்கள் லாபகரமாக நடத்தும்போது, அதுபோல ஏர் இந்தியா நிறுவனத்தால் ஏன் நடத்த முடியாது.
எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு ஈடு இணையான நிறுவனம் வேறு எதுவும் இல்லை.
இந்நிலையில், இதை தனியார்மயமாக்குவது தொழிலாளர்களுக்கு செய்யக்கூடிய துரோகச் செயல். பா.ஜ.க. அரசுக்கு பரந்த ஞானம் இல்லை. எல்லாவற்றையும் ஒரே மாதிரியாக தான் பார்க்கின்றனர். நஷ்டம் வரும்போது அந்த நிறுவனத்தை விற்பதில் தான் உள்ளனர்.
பொறுப்பு
பொதுத்துறை நிறுவனங்களின் சீரழிவுக்கு அதன் செயல்பாடுகளும், தொழிலாளர்களும் காரணமல்ல. நிர்வாக குறைபாட்டால் தான் பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிகின்றன. இந்த தேசம் நம் சொத்து. இதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தென் மண்டல காப்பீட்டு ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் சுவாமிநாதன், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சங்கத்தின் பொதுச் செயலாளர் சேதுராமன், இணைச் செயலாளர் சரவணபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story