டி.என்.பாளையம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு


டி.என்.பாளையம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 6 March 2022 4:01 AM IST (Updated: 6 March 2022 4:01 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பாளையம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் அருகே ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வாலிபர்
திருப்பூர் மாவட்டம் சேவூர் மங்கரசு வளையபாளையம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன். அவருடைய மகன் இளங்கோ (வயது 19). இவர் சேவூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையத்தை அடுத்த கே.என்.பாளையம் அருகே உள்ள  கொண்டப்பன்நாயக்கன்பாளையத்தில் இளங்கோவின் சித்தப்பா வீடு உள்ளது.
இந்தநிலையில் சித்தப்பா வீட்டுக்கு இளங்கோ வந்திருந்தார். நேற்று மதியம் 12 மணி அளவில் இளங்கோ, அவருடைய சித்தப்பா மகன் சீனிவாசன், அதே பகுதியை சேர்ந்த மாமன் மகன் அர்ஜூனன் மற்றும் பாரதிக்குமார் ஆகியோருடன் கொடிவேரி பவானி ஆற்றுக்கு துணி துவைக்க சென்றுள்ளனர்.
ஆற்றில் குளித்தவர் சாவு
அங்கு துணிகளை துவைத்த பிறகு 4 பேருக்கும் ஆற்றில் குளிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதனால் 4 பேரும் ஆற்றில் இறங்கினர். இதில் சீனிவாசன், அர்ஜூனன், பாரதிக்குமார் ஆகியோர் ஆற்றின் கரையோரத்தில் நின்று குளித்தனர். இளங்கோ ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். மேலும் அவருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது.
இதனால் அவர் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதை பார்த்த 3 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே ஆற்றில் நீந்தி சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. அதற்குள் இளங்கோ தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். பின்னர் இதுகுறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று இளங்கோவை தேடி பார்த்தார்கள். சிறிது நேர தேடலுக்கு பிறகு இளங்கோவின் உடல் மீட்கப்பட்டது.
கதறல்
இதுபற்றி அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இளங்கோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த இளங்கோவின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

Next Story